
செஸ் விளையாட்டில் முன்னணி வீரராக திகழ்பவர் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen). இவர் 2013-ம் ஆண்டு அவரது 22-வது வயதில் இரண்டாவது இளைய உலக செஸ் சாம்பியன் ஆனார். மேலும் FIDE உலக சதுரங்க தரவரிசையில் 2011-ம் ஆண்டு முதல் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற கார்ல்சன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி ஒன்றுக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது மேக்னஸ் விதிமுறைக்கு மாறாக உடை அணிந்து வந்ததாக புகார் எழுந்தது. செஸ் விளையாட்டை உலக அளவில் கட்டுப்படுத்தி வரும் ஃபிடே அமைப்பு, செஸ் தொடரில் பங்கேற்று விளையாட வரும் வீரர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிந்து வர வேண்டும் என்று கட்டுபாட்டு விதிகளை வெளியிட்டு இருந்தது.
அந்த ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி, போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது என்ற விதியும் இடம் பெற்று இருந்தது. இந்த போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த மேக்னஸ் கார்ல்சனை தடுத்து நிறுத்திய ஃபிடே அதிகாரிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தது தவறு என சுட்டிக்காட்டியதுடன் 200 டாலர் அபராதமும் விதித்து, ஜீன்ஸ்சை மாற்றிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுமாறு வார்னிங் செய்தது.
ஆனால், மேக்னஸ் கார்ல்சன் நாளை வேறு பேண்ட் அணிந்து வருவதாக கூறியபோதும் அதிகாரிகள் ஒப்புக் கொள்ளாததால், ஜீன்ஸை மாற்றி விட்டு போட்டியில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்து தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி சர்வதேச செஸ் சம்மேளனத்தின் நடவடிக்கையை கார்ல்சென் கடுமையாக கண்டித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ஒரு தரப்பினர் இவருக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் விதிமுறையை மீறியது தவறு என்றும் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இரண்டே நாள்களில் ஆடை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, வீரர்கள் ஜீன்ஸ் அணிந்து செஸ் தொடரில் பங்கேற்கலாம் என்று ஃபிடே அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து, இத்தொடரின் நடப்பு சாம்பியனான கார்ல்சன், மீண்டும் போட்டிக்குத் திரும்பினார்.
இந்நிலையில் அறக்கட்டளை நிதிக்காக பல சர்ச்சைகளை ஏற்படுத்திய கார்ல்சென் அணிந்திருந்த அந்த ஜீன்ஸ் பேண்ட் ஆன்-லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த ஜீன்சின் தொடக்க விலை ரூ.12¼ லட்சம் என அறிவிக்கப்பட்டது. 10 நாட்கள் நடந்த ஏலத்தில் 22 பேர் 94 முறை விலையை உயர்த்தினர். இறுதியில் கார்ல்செனின் ஜீன்ஸ் ரூ.31½ லட்சத்துக்கு ஏலம் போனது. ஜீன்ஸ் பேண்ட் ஒன்று இத்தனை லட்சத்திற்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஏலம் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும் பிக் பிரதர்ஸ் பிக் சிஸ்டர்ஸ் திட்டத்திற்கு செல்கிறது என்று மேக்னஸ் கார்ல்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.