ஐபிஎல் கிரிக்கெட்: 17 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி!

சென்னை அணியின் கோட்டையாக திகழும் சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளுக்குப்பின் சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்று பழைய பகையை தீர்த்துள்ளது.
CSK vs RCB
CSK vs RCB
Published on

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. கடந்த 23-ம்தேதி நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் இதே மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய முன்னாள் கேப்டன்கள் தோனி, விராட் கோலி நேருக்கு நேர் கோதாவில் குதிப்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்நிலையில் ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட்கோலியும், பில் சால்ட்டும் நுழைந்தனர்.

தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடத்தொடங்கிய பில் சால்ட் 32 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த படிக்கல் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கோப்டன் படிதார் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய போதிலும், சிஎஸ்கே அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கோலி 31 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் முடிந்த வரை வேகமாக ரன் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

இதையும் படியுங்கள்:
பெங்களூரு அணி வெற்றியே பெறாததற்கு இதுதான் காரணம் – முன்னாள் வீரர் பேச்சால் சர்ச்சை!
CSK vs RCB

இதனால் ரன்னும் வந்தது. அதே நேரத்தில் விக்கெட்டும் சீரான இடைவெளியில் சரிந்தது. அதனை தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 10 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 12 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய படிதார் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னில் அவுட் ஆன நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது.

சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரானா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 197 ரன் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், ராகுல் திரிபாதி 5 ரன்னிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எடுக்காமல் இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார். இதனால் தடம் புரண்ட சென்னை அணியால் அதன் பிறகு மீளவே முடியவில்லை. அடுத்து வந்த தீபக் ஹூடா 4 ரன்னிலும், சாம் கர்ரனும் 8 ரன்னிலும் வெளியேறினர்.

இதையும் படியுங்கள்:
"சேப்பாக்கம் சிஎஸ்கே அணியின் கோட்டை" - ஆர்சிபிக்கு வாட்சன் எச்சரிக்கை!
CSK vs RCB

இன்னொரு பக்கம் வெற்றிக்காக போராடிய ரச்சின் ரவீந்திரா 41 ரன்னில் அவுட்டானதும் சென்னை அணியின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது. ஆட்டமும் உப்பு-சப்பின்றி போனது. கடைசி ஓவரில் தோனி 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசியது மட்டுமே அணிக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதலை அளித்தது. 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தனது தொடக்க ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியிருந்த சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

சேப்பாக்கம் மைதானத்தில் 2008ம் ஆண்டு சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியது. அதன்பின், பெங்களூருவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சென்னை வெற்றிபெற்றது. சென்னை அணியின் கோட்டையாக சேப்பாக்கம் திகழ்ந்தது. தற்போது 17 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்று பழைய பகையை தீர்த்துள்ளது.

சிஎஸ்கே தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராஜஸ்தான் ராயல்சை கவுகாத்தியில் சந்திக்கிறது.

இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டை வைத்து ஸ்டேடியத்திற்கு செல்லவும், போட்டி முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கும் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பஸ்களை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2025: ‘சிஎஸ்கே’ அணியின் முழு போட்டி அட்டவணை
CSK vs RCB

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com