
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிமுகமான பிறகு, பல இந்திய இளம் வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. உலகின் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக இருந்தாலும், இளம் வீரர்களின் வளர்ச்சிக்கும் ஐபிஎல் தொடர் உதவி வருகிறது. ஆண்டுதோறும் புதிய வீரர்கள் உதயமாகின்றனர். கடந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷஷாங்க் சிங், இந்த வருடம் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அசுதோஷ் சர்மா. இன்னும் சில வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். நடப்பாண்டின் முதல் போட்டியில் தோல்வியின் பிடியில் இருந்த டெல்லி அணி, வெற்றிக்கனியைப் பறிக்க உதவினார் அசுதோஷ் சர்மா. இவரது சிறப்பான பேட்டிங்கிற்கு 3 ஜாம்பவான்கள் தான் காரணமாம்.
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தனது முதல் போட்டியில் லக்னோவை எதிர்த்து விளையாடியது. 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் அசுதோஷ் சர்மா. இந்தப் போட்டிக்கு முன்பு வரை நிச்சயமாக இவரது பெயர் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், போட்டி முடிந்த பிறகு கிரிக்கெட் உலகமே இவரது பெயரை அறிந்து கொண்டது.
தான் எதிர்கொண்ட முதல் 20 பந்துகளில் ரன்களைக் குவிக்கத் தடுமாறியவர், அடுத்த 10 பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். கிட்டத்தட்ட 200 ஸ்டிரைக் ரேட்டிங் விளையாடியவர் 31 பந்துகளில் 66 ரன்களைக் குவித்து டெல்லியை வெற்றி பெறச் செய்தார். அந்த வெற்றிக்குப் பின்னர், இந்தியாவின் அடுத்த அதிரடி பேட்டர் தயாராகி விட்டார் என்ற பேச்ச அடிபடத் தொடங்கி விட்டது.
தனது அதிரடியான ஆட்டத்திற்கும், தரமான பந்துகளை எதிர்கொண்டதற்கும் முக்கிய காரணமே ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் தான் என சமீபத்தில் தெரிவித்தார் அசுதோஷ் சர்மா.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது, ஷிகர் தவான் எனக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். மனதளவில் முன்னேற்றத்தைக் காண்பது தான் நமக்கான வெற்றியைப் பரிசளிக்கும் எனவும் கூறினார்.
தன்னம்பிக்கை நிறைந்த மனநிலை நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என அவர் கூறியது எனக்கு மிகவும் உதவியது. அதேபோல் கடந்த ஆண்டு சென்னைக்கு எதிரான போட்டியில் தோனியுடன் பேசினேன். அவர் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். ஆனால் அதனை நான் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
நடப்புத் தொடரில் இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் எங்களுடன் உள்ளார். லக்னோவுக்கு எதிரான போட்டியில் உன்னால் முடியும்; உன்னுடைய சொந்தத் திறமைகளை நம்பு என எனக்கு அவர் உத்வேகம் அளித்தார். நான் சிறப்பாக செயல்பட இவர்கள் மூவரும் தான் காரணம்” எனக் கூறினார் அசுதோஷ் சர்மா.
இவர் சிக்ஸ் அடிப்பதற்காக தினமும் 2 முதல் 3 மணி நேரம் வரை பயிற்சி செய்கிறார். அதற்கான பலனும் இவருக்கு கிடைத்தது. யார்க்கர் பந்துகளை சிக்ஸருக்கு விளாச கடின உழைப்பு தேவை. களத்தில் வெற்றிக்காக போராடுவதில் மட்டுமே மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.