மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான விக்னேஷ் புத்தூருக்கு தோனி சொன்ன அறிவுரை குறித்து பார்ப்போமா?
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஐபிஎல் தொடரை சென்னை அணி தனது முதல் ஆட்டத்தை மும்பைக்கு எதிராக விளையாடி தொடங்கியது. சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடிய போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மும்பை அணியில் விக்னேஷ் விளையாடினார்.
தனது அறிமுக ஆட்டத்திலேயே கேரளாவை சேர்ந்த விக்னேஷ் புத்தூர் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். போட்டி முடிந்ததும் தோனி விக்னேஷிடம் ஏதோ பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
விக்னேஷ் புத்தூர் கேரளா அணிக்காக விளையாடியது கிடையாது. அவரை ஒரு டி20 லீக்கில் பார்த்த மும்பை இந்தியன்ஸ் திறன் கண்டறியும் குழு உடனடியாக உள்ளே கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து அவரை தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியில் கொண்டு இணைத்தது. தொடர்ந்து பயிற்சிகளை கொடுத்து வந்ததுடன், ஏலத்தின் போது 30 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியது. முதல் போட்டியிலேயே வாய்ப்பும் கொடுத்தது.
விக்னேஷின் நண்பர் ஸ்ரீராக் என்பவர் அவருக்கு அலைபேசியில் அழைத்து கேட்டு தெரிந்து இருக்கிறார். தற்போது இதை அவர் மீடியாக்களிடம் கூறியிருக்கிறார். மேலும் தோனி மிக முக்கியமான அறிவுரை ஒன்றை கூறி இருக்கிறார்.
இதுகுறித்து விக்னேஷ் நண்பன் பேசும்போது, “நான் அவரை அழைத்து தோனி உன்னிடம் என்ன சொன்னார் என்று கேட்டேன். அதற்கு அவர் தோனி தன்னிடம் வயது என்னவென்று கேட்டதாகவும், இதற்கு அடுத்து ஐபிஎல் தொடருக்கு உன்னை எது அழைத்து வந்ததோ அதை விட்டு விடாமல் தொடர்ந்து செய் என்றும் அறிவுரை கூறினாராம்.” என்று தெரிவித்தார்.
மேலும் அவருடைய நண்பர் பேசுகையில், “கிரிக்கெட் எவ்வளவு சீக்கிரத்தில் பணத்தைக் கொடுக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். வினோத் காம்ப்ளி மற்றும் பிரிதிவிஷா ஆகியோருக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம். அவன் மூன்று விக்கட்டுகள் கைப்பற்றி உடனடியாக பிரபலம் ஆனதை பார்த்து அவருடைய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் அவன் எதையும் சரியாக எடுத்து செயல்பட கூடியவன்.” என்று பேசினார்.