
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் எம்எஸ் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இன்று ஜூலை 7 இல் பிறந்தநாள் காணும் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனிக்கு வாழ்த்துகள். திறமையான கேப்டன்சி, ஃபினிஷிங் ஸ்டைல் மற்றும் அபாரமான விக்கெட் கீப்பிங் திறமை போன்றவற்றால் ரசிகர்களைக் கவர்ந்தவர் தோனி. தொடக்க காலத்தில் கிரிக்கெட்டில் தடம் பதிக்க வாய்ப்பைத் தேடி முயற்சித்த தோனி தான், பிற்காலத்தில் இந்தியாவுக்கு 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தார். இவரது பேட்டிங் திறனைக் காட்டிலும், கேப்டன்சி மற்றும் விக்கெட் கீப்பிங் திறமைக்காகத் தான் அதிகம் பேசப்பட்டார்.
இளம் இந்திய வீரர்களைக் கொண்டு முதல் டி20 உலக்கோப்பையை வென்ற தோனி, விக்கெட் கீப்பிங்கில் தனித்துவமான பாணியைக் கடைபிடித்து வருகிறார். மற்ற கீப்பர்களைப் போலவே செயலாற்ற தோனி எப்போதும் விரும்பியதில்லை. ஸ்டம்புக்கு பின்னால் அற்புதத்தை நிகழ்த்த வேண்டும் என்ற வேட்கை கொண்டவர் தோனி. அந்த வேட்கைக்கு சரியான பயிற்சியை அளித்தவர் தான் இந்தியாவின் முன்னாள் வீரர் கிரண் மோர்.
1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய விக்கெட் கீப்பர் தான் கிரண் மோர். பிற்காலத்தில் இவர் இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். அச்சமயத்தில் தோனியின் கீப்பிங் ஸ்டைலைப் பார்த்த கிரண் மோர், அவரிடம் தனித்துவமாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்தார். தோனிக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி சிறப்பாக பயிற்சியளித்தால், சர்வதேச அளவில் நிச்சயமாக தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருவார் என்பதை கிரண் மோர் அன்றே கணித்தார். அதற்கேற்ப தோனியின் இயற்கையான கீப்பிங் ஸ்டைலை மாற்றாமல், தேவையான பயிற்சிகளை மட்டும் அளித்து, சிறந்த விக்கெட் கீப்பராக தோனி உருவெடுக்க உதவினார்.
தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (998) மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (905) ஆகியோரை அடுத்து, சர்வதேச அளவில் விக்கெட் கீப்பங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் தோனி தான். கேட்ச், ரன் அவுட், ஸ்டம்பிங் என மொத்தம் 829 விக்கெட்டுகள் விழ முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் தோனி.
ஸ்டம்புக்குப் பின்னால் பந்து வருமேயானால், தன்னைத் தாண்டி செல்ல அனுமதிக்க மாட்டார் தோனி. இதனை நாம் பல போட்டிகளில் பார்த்திருப்போம். வேகமான ஸ்டம்பிங், கால்களைப் பயன்படுத்தி பந்தைத் தடுக்கும் விதம் என அனைத்திலும் மற்ற கீப்பர்களைக் காட்டிலும் வித்தியாசமாகத் தெரிந்தார் தோனி. இன்று தோனியின் பேட்டிங் சரிவைக் கண்டிருக்கலாம்; ஆனால் விக்கெட் கீப்பிங் பணியில் மட்டும் அதே வேகத்துடன் செயல்படுகிறார்.
புள்ளி விவரங்களின் அடிப்படையில் சர்வதேச அளிவில் 3ஆம் இடம் வகித்தாலும், அனைவரைக் காட்டிலும் தனித்துவமானவர் தோனி. இந்திய அளவில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் பலரும் சொல்வது தோனியின் பெயரைத் தான். தோனியின் கிரிக்கெட் பயண வெற்றியில் கிரண் மோருக்கும் மிக முக்கிய பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. இனி எத்தனை விக்கெட் கீப்பர்கள் வந்தாலும், தோனியின் இடத்தை நிரப்புவது மிக மிக கடினம்.