
உலகின் ஏதோ ஒரு மூலையில் வசிப்பவர்கூட, தன் விளையாட்டுத் திறமையை உலகளாவ நிரூபிக்ககூடிய வாய்ப்பைத் தருவதுதான் ஒலிம்பிக் போட்டி.
ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் குழுவினருக்காக சுமார் 400 விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த விளையாட்டுகளில் வீரர்களைத் தேர்வு செய்ய, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாலேயே, 1927ம் ஆண்டு, இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டே, 1928ல் இந்திய ஹாக்கி குழு தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தது.
இரண்டாம் உலகப்போர் காரணமாக 1940, 1944 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும், 1948 முதல் 1956ம் ஆண்டுவரை இந்தியா ஹாக்கி போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்றது. ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் தங்கம், வெள்ளியாகி, வெள்ளி வெண்கலமாகி, பிறகு அதுவும் இல்லாமல் போய்விட்டது!
இதற்கிடையில் மற்போர், டென்னிஸ், பேட்மின்டன், துப்பாக்கிச் சுடுதல், எடை தூக்குதல், குத்துச்சண்டை, தடகளப் போட்டிகளில் தனி வீரர்கள் பங்கேற்றார்கள். 2008 ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் கிடைத்தது நமக்கு.
தொடர்ந்து 2012ம் ஆண்டு மொத்தம் 6 பதக்கங்களை இந்தியா வென்றது. இவை, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், இறகுப் பந்து, குத்துச்சண்டை போட்டிகளில் கிட்டியவை.
2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வி.பி. சிந்து (பேட்மின்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்) இருவரும் முறையே வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்றார்கள்; 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில்1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள்; 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என்று ஆறு பதக்கங்கள்.
நம் நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்க மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் திறமை மதிப்பீடு செய்யப்படுகிறது. கல்விக்கூடங்களில் நடைபெறும் போட்டிகள் தவிர, பொது அமைப்புகள் நடத்தும் போட்டிகளிலும் வீரர்களின் திறமைகள் பரிசீலிக்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு என்றவகையில் அரசு நிறுவனங்களிலும், சில தனியார் நிறுவனங்களிலும் பலருக்கும் பணி கிட்டுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டுத் திறன் கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை நடத்தி வருகிறது. நல்ல பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவு ஆகியவற்றை இவ்வாறு 28 விளையாட்டு விடுதிகள் வழங்குகின்றன.
இந்த விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான தேர்வுகள் சென்னையில் நடைபெறுகின்றன. 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மற்றும் 21 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவியரும், ஏற்கெனவே தேசிய போட்டிகளில் பங்கேற்றவர்களும், அவற்றில் வெற்றி பெற்றவர்களும் இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
தடகளம், கால்பந்து, ஹாக்கி, இறகுப்பந்து, நீச்சல், மேஜைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, குத்துச்சண்டை, கபடி, கைப்பந்து, டேக்வாண்டோ, வாள்சண்டை முதலான விளையாட்டுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன; வென்ற வீரர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டு, உலக அரங்கில் தம் வித்தையை நிரூபிக்கத் தயாராகிறார்கள்.
ஹாக்கி விளையாட்டில் மட்டும் பதக்கம் என்ற நிலைமாறி, இப்போது வேறு சில தனிநபருக்கான போட்டிகளிலும் நம் வீரர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள்.
விளையாட்டில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தம் ஆற்றலை ஆக்கபூர்வமாக ஒலிம்பிக் போட்டிகள்வரை வளர்த்துக்கொண்டு, உலகளாவிய சாதனைகளைப் புரிந்து, பதக்கங்களை வென்று, நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. இந்த ஊக்கமும், உற்சாகமும் நம் வீரர்களை தம் இலக்கு நோக்கிப் பயணிக்கவும், சாதனைகள் புரியவும் உதவும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.