
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான மற்றும் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இவர் நிகழ்த்திய சாதனைகள் அசாத்தியமானவை. இன்று வரையிலும் சச்சினின் பல சாதனைகள் முறியடிக்கப்படாமலே இருக்கின்றன. சச்சின் களத்தில் இருந்தால், இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உண்டு. அப்பேற்பட்ட ஜாம்பவானின் ஆட்டத்தை ரசிகர்கள் பலமுறை நேரில் பார்த்து ரசித்ததுண்டு. ஆனால், சச்சின் தாயார் அவரது ஆட்டத்தை ஒரே ஒரு முறை மட்டுமே நேரில் பார்த்துள்ளார். இது எப்போது, எப்படி நடந்தது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
இந்திய அணிக்காக சுமார் 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், சதத்திற்கே சதம் கண்ட நாயகன். உலகம் முழுக்க சச்சின் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரரும் இவர் தான்.
சச்சின் தனது கடைசி போட்டியை கடந்த 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ‘எனது கடைசி போட்டி மும்பையில் நடைபெறுவதற்கு காரணமே நான் தான்’ என்பதை சச்சின் சமீபத்தில் தெரிவித்தார். இதற்கான காரணத்தைக் கேட்டால் நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
24 ஆண்டுகள் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய சச்சினின் ஆட்டத்தை, அவரது தாயார் ரஜினி டெண்டுல்கர் ஒருமுறை கூட நேரில் பார்த்தது இல்லையாம். தான் கடைசியாக விளையாடும் ஆட்டத்தையாவது, தன் தாய் காண வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் போட்டியை மும்பையில் நடத்துமாறு பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளார் சச்சின். ஏனெனில் அப்போது சச்சினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், பயணம் செய்ய முடியாத சூழலில் இருந்தார். மும்பை சொந்த ஊர் என்பதால், அங்கு வந்து போட்டியைக் காண முடியும் என்று சச்சின் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ, சச்சின் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்தியது.
சச்சின் களத்திற்கு வந்த போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், அவருக்கு மரியாதை அளித்தனர். சச்சின் பேட்டிங் செய்து கொண்டிருந்த தருணத்தில் மைதானத்தில் இருந்த பெரிய டிஸ்பிளேவில் அவரின் தாயாரைக் காட்டினார் கேமராமேன். இதனைக் கண்டு சச்சின் நெகிழ்ந்து போனாலும், ஆட்டத்தில் கவனத்தை செலுத்தினார்.
மும்பையின் வான்கடே மைதானம் தற்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இந்திய அணியின் பல சரித்திர வெற்றிகளுக்கு காரணமான இந்த மைதானத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கர், அஜிங்கியா ரஹானே மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தான் 'ஏன் கடைசி போட்டியை மும்பையில் விளையாடினேன்' என்பதற்கான விளக்கத்தை சச்சின் அளித்தார்.