சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் சுப்மன் கில்லை துணை கேப்டனாக ஆக்கியது நியாயமே இல்லை என்று ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். இதுகுறித்தான முழு செய்தியையும் பார்ப்போம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும்.
இந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும். குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.
சாம்பியன்ஸ் ட்ராபிக்கான இந்திய அணி வீரர்களை கடந்த சனிக்கிழமை பிசிசிஐ அறிவித்தது. ரோஹித் ஷர்மா கேப்டன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்.
இதில் துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்தது குறித்துதான் ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். “சுபமன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை. 6, 35, 16, 4 என்பது அவருடைய கடைசி இன்னிங்ஸ்களின் ஸ்கோர். பெரிய அணிகளுக்கு எதிராக அவர் பெரியளவில் அசத்தியதில்லை.
அப்படிப்பட்ட நிலையில் அவரைத் துணைக் கேப்டன் ஆக்கியதற்கு என்ன காரணம்? ஸ்குவாடில் பும்ரா இருக்கும்போது அவர்தான் அந்த பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.. ஒன்னுமே புரியல எனக்கு.. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவே தர மாட்டிக்கிறீங்களே.” என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.
சமீபக்காலமாக நல்ல ஃபார்மில் இல்லாத கில் துணை கேப்டனாக ஆக்கப்பட்டது ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.