இங்கிலாந்தின் 'ரன்‌ மெஷினாக' சாதனை படைக்கும் ஜோ ரூட்!

Run Machine
Joe Root
Published on

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஜோ ரூட், கடந்த சில ஆண்டுகளில் ரன் வேட்டையில் மிரட்டி வருகிறார். சக வீரர்கள் சொதப்பும் போது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்த பெருமைக்கும் சொந்தக்காரர் ரூட். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது ஏற்ற இறக்கத்தை அலசுகிறது இந்தப் பதிவு.

கிரிக்கெட் உலகில் சமீப காலமாக இங்கிலாந்து அணி பாஸ்பால் எனும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்துக்கு கேன் வில்லியம்சன் ஆகியோர் ரன் குவிப்பதில் கில்லாடியாக இருந்தவர்கள். இதே காலகட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு ரன் மெஷினாக இருந்தவர் தான் ஜோ ரூட். ஆனால் 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஜோ ரூட்டின் ஆட்டம் சொல்லும் படியாக அமையவில்லை. அதே நேரத்தில் கோலி, ஸ்மித் மற்றும் வில்லியம்சன் ஆகியோரின் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது.

தனது ஆட்டத்திறனை மீட்டெடுக்கும் பொருட்டு அதீத பயிற்சியில் ஈடுபட்ட ஜோ ரூட், 2021 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்கு ரன் குவிப்பதில் மெஷினாக இருந்து வருகிறார். ஆனால், இந்த காலகட்டத்தில் இவர் அளவுக்கு வேறு யாரும் ரன்களை குவிக்கவில்லை என்பது தனிக்கதை. 2018 - 2020 காலகட்டத்தில் ஜோ ரூட்டின் பேட்டிங் சராசரி 40-க்கும் கீழே குறைந்தது. அதாவது 60 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 4 சதங்களை மட்டுமே அடித்திருந்தார். எனக்கான நேரம் வரும் போது நான் தான் ராஜா என்பது போல, 2021-க்குப் பிறகு 91 இன்னிங்ஸ்களில் விளையாடிய ரூட், 4,841 ரன்களைக் குவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் 18 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் இவரது பேட்டிங் சராசரி 58.32 ஆக உயர்ந்தது.

இதையும் படியுங்கள்:
Ind Vs Aus: அணியிலிருந்து விலகும் ரோகித்… அப்போ கேப்டன் பதவி யாருக்கு?
Run Machine

ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்திய மண்ணில் மற்ற இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் மட்டும் தனி ஆளாக ரன்களைக் குவித்தார். குறிப்பாக இலங்கைக்கு எதிராக காலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார். இந்தியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் இரட்டைச் சதம் அடித்து தூணாக நின்றார்.

ஒரே ஆண்டில் டெஸ்டில் 1,000 ரன்களை 6 முறை குவித்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் 5 முறை 1,000 ரன்களைக் குவித்து ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், மேத்யூ ஹெய்டன், குமார் சங்கக்காரா, பிரையன் லாரா மற்றும் அலஸ்டயர் குக் ஆகியோர் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஜோ ரூட்டும் 5 முறை 1,000 ரன்களைக் குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக 2021-க்குப் பிறகு மட்டும் 3 முறை 1,000 ரன்களைக் குவித்து அசாத்தியமாக பேட்டிங் செய்து வருகிறார். சமீபத்தில் பாகிஸ்தானிற்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டைச் சதம் அடித்தும் அசத்தியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட்டில் சாதிக்க ஃபிட்னஸ் முக்கியமா? திறமை முக்கியமா?
Run Machine

தற்போது டெஸ்டில் 12,664 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரூட் 5வது இடத்தில் உள்ளார். அதேபோல் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 35 சதங்களுடன் 6வது இடத்தில் இருக்கிறார். இதே செயல்திறனோடு ரூட் விளையாடினால், அடுத்த 50 இன்னிங்ஸ்களில் நிச்சயமாக சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச ரன் சாதனையைத் தகர்த்து, முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் 15,921 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com