
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கியது. இப்பேட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து ஜெய்ஸ்வால் 58, சுப்மன் கில் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த், தமிழக வீரர் சாய் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய சுதர்ஷன் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. அப்போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பந்தின் காலில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது.
காயத்தால் அவதிப்பட்ட பந்த், மைதானத்தில் வலியால் துடித்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரிஷப் பந்த் ரிடயர்டு ஹர்ட் முறையில் வெளியேறியதும் ரவீந்திர ஜடேஜா களம் புகுந்தார். பிறகு 61 ரன்களில் சுதர்ஷன் தனது விக்கெட்டைப் பறிகோடுக்க, ஷர்துல் தாகுர் களத்திற்கு வந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைக் குவித்துள்ளது. ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகுர் இருவரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற ரிஷப் பந்த் இப்போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரிஷப் பந்த் விளையாடுவதில் சந்தேகம் தான் என தற்போது பிசிசிஐ பதிலளித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “காயமடைந்த ரிஷப் பந்திற்கு மருத்துவமனையில் உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவரது உடல்நிலையை பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது. காயத்தில் இருந்து ரிஷப் பந்த் மீண்டு விட்டால், அடுத்த விக்கெட் விழுந்த பிறகு மீண்டும் பேட்டிங் செய்ய இயலும். இருப்பினும் பந்த் தொடர்ந்து விளையாட முடியுமா என்பதை மருத்துவர்கள் தான் உறுதி செய்ய வேண்டும்” பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஒருவேளை ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை எனில், அவருக்கு பதிலாக வேறொருவரை இந்திய அணி களமிறக்க முயற்சிக்கும். அப்படி செய்தால் ஐசிசி விதிகளின் படி ரிஷப் பந்தால் மீண்டும் பேட்டிங் செய்ய இயலாது. ஃபீல்டிங் மட்டுமே செய்ய முடியும்.
ரிஷப் பந்த்திற்கு மாற்று வீரராக இந்திய அணியில் துருவல் ஜூரெல் இருக்கிறார். 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்திற்கு கையில் காயம் ஏற்பட்ட போது, துருவ் ஜூரெல் தான் விக்கெட் கீப்பிங் செய்தார். இப்போட்டியிலும் அவர் தான் விக்கெட் கீப்பங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் ஜூரெல் ஒரு சிறந்த பேட்டரும் கூட என்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கப்படவில்லை. ஒருவேளை ரிஷப் பந்திற்கு பதிலாக துருவ் ஜூரெல் களமிறக்கப்பட்டால், தனது பேட்டிங் திறமையை நிச்சயமாக நிரூபிப்பார். இருப்பினும் ரிஷப் பந்த் இல்லாத குறையை அவரால் நிவர்த்தி செய்ய முடியுமா என்ற எதிர்பார்ப்பும் அவர் மீது எழும்.