
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகத் திகழும் ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு உலகக்கோப்பையை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக அசாத்திய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் ஐசிசி அவ்வப்போது வீரர்கள் தரவரிசை மற்றும் அணிகளின் தரவரிசையை வெளியிடும். எப்போதும் இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் சிலர் முதல் 10 இடங்களில் அங்கம் வகிப்பார்கள். அவ்வகையில் சமீபத்தில் வெளியான ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதே சாதனை தான். அதிலும் அந்த இடத்தை பல நாட்களுக்கு தக்க வைப்பது என்பது உண்மையில் பாராட்டக் கூடிய விஷயம். ஆனால் ரவீந்திர ஜடேஜா நாட்கள் மற்றும் மாதங்களையும் தாண்டி வருடக் கணக்கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா. ஆனால் அடுத்த ஒரு வாரத்திலேயே முதல் இடத்தை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். அதன்பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 9 இல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் ஜடேஜா. இம்முறை முதலிடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் என்றால் அது மிகையாகாது.
அன்றிலிருந்து இன்று வரை ஜடேஜா தான் நம்பர் 1. களத்தில் நன்றாக செயல்பட்டதன் பலனாக ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேல் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளார். சமீபத்திய தகவலின் படி 400 டெஸ்ட் புள்ளிகளுடன் 1,153 நாட்கள் ஜடேஜா முதலிடத்தில் தொடர்ந்திருக்கிறார். இதுதான் தற்போது உலக சாதனையாக கருதப்படுகிறது. உலகளவில் எந்தவொரு வீரரும் இத்தனை நாட்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கவில்லை.
முதல் இடத்தைப் பிடித்த நாள் முதல் ஜடேஜா 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 36.71 என்ற பேட்டிங் சராசரியுடன் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் உள்பட 1,175 ரன்களைக் குவித்திருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரை 22.34 என்ற சராசரியுடன் 91 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். ஜடேஜாவுக்கு அடுத்த இடத்தில் வங்கதேச வீரர் மெஹதி ஹசன் இருக்கிறார்.
அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா விளையாட இருக்கிறார். அங்கு நன்றாக விளையாடினால் முதலிடத்தில் நீடிக்கும் இந்த நாட்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ரவீந்திர ஜடேஜா 3,370 ரன்களைக் குவித்ததுடன், 323 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து ஜடேஜா விளையாடும் பட்சத்தில் 100 டெஸ்ட் போட்டிகளை எட்டி விடுவார். தற்போதைய இந்திய அணியில் ஜடேஜா தான் சீனியர் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.