

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர உள்ளார். இது நாடு முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று நாள் பயணத்தின் போது , அவர் மும்பை , கொல்கத்தா , டெல்லி , ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். மெஸ்ஸியின் ஹைதராபாத் வருகையின் போது, அவருடன் சேர்ந்த புகைப்படம் எடுத்துக் கொள்ள 10 லட்ச ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது.
மெஸ்ஸி தனது GOAT இந்தியா சுற்றுப் பயண திட்டப்படி டிசம்பர் 13 அன்று , முதலாவதாக கொல்கத்தா மாநகருக்கு வருகை தர உள்ளார். கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 75 அடி உயர சிலையை அவரே திறந்து வைக்க உள்ளார். அதன் பின்னர் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவருடன் சக அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ டி பால் மற்றும் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் ஆகியோரும் வருகிறார்கள் .
கொல்கத்தா மைதானத்தில் நட்பு ரீதியான சிறிய கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு மெஸ்ஸி விளையாடுவார். இந்தப் போட்டியை கண்டுகளிக்க , முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி , நடிகர் ஷாருக்கான் , மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் வருகை தர உள்ளனர். கொல்கத்தா பயணத்தை நிறைவு செய்து விட்டு 200 பேர் கொண்ட குழுவுடன் மெஸ்ஸி ஹைதராபாத்திற்கு வருகை தருகிறார்.
ஹைதாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில், சிங்கரேணி RR-9 அணி மற்றும் அபர்ணா மெஸ்ஸி ஆல் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையில் ,நட்பு ரீதியிலான ஒரு கண்காட்சி விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில்
பயிற்சி பெற்ற 5 இளம் வீரர்கள் மற்றும் பயிற்சி பெற வசதியில்லாத 10 திறமையான இளம் வீரர்களும் பங்கு பெறுகிறார்கள்.
இந்த போட்டியில் மெஸ்ஸியும் கலந்து கொள்கிறார் , இறுதி 5 நிமிடங்கள் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கால்பந்து விளையாட உள்ளார். இதற்காக ரேவந்த் ரெட்டி கால்பந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சில அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் கூட கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் இளம் கால்பந்து வீரர்களுக்கான பயிற்சி வகுப்பை மெஸ்ஸி நடத்துகிறார். அதை தொடர்ந்து ஃபலக்னுமா அரண்மனையில் போட்டோ ஷூட் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துக் கொண்டு மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ₹9.95 லட்சம் + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதலில் புக்கிங் செய்யும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இந்த தகவல்களை தி கோட் டூர் ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் மெஸ்ஸி கலந்துக் கொள்ளும் கண்காட்சி கால்பந்தாட்ட போட்டிகளைக் காண டிக்கெட்டுகள் ஆன்லைன்களில் விற்பனைக்கு உள்ளன. ஹைதரபாத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மெஸ்ஸி மும்பையில் ஒரு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதற்கு அடுத்த நாள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு , தனது இந்திய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார். இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சி கால்பந்தாட்ட போட்டிகாக மெஸ்ஸி இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.