'FIFA உலகக் கோப்பை': இந்த 'தங்க தேவதை'யின் 'பிண்ணனியில் இவ்வளவு சுவாரஸ்யங்களா...?

நைக் தேவதையின் உருவம் பொறிக்கப்பட்ட ஜூல்ஸ் ரிமெட் கோப்பை, ஹிட்லரிடமிருந்து ஷூ பாக்ஸில் மறைக்கப்பட்ட ரகசியம் முதல் பிக்கிள்ஸ் நாய் கண்டுபிடித்த திருட்டு நாடகம் வரை...
FIFA Trophy History
FIFA world cup Trophy HistoryImage credit: AI
Updated on

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை, உலகமே கொண்டாடும் ஒரு திருவிழாவின் மகுடம் — கால்பந்து உலகக் கோப்பை. இது வெறும் விளையாட்டுப் போட்டியின் வெற்றி மகுடம் மட்டுமல்ல; அந்தத் தங்கக் கோப்பையின் பின்னால், பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. கால்பந்து உலகக் கோப்பையின் 96 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 8 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்த உலகக் கோப்பைகளை வென்ற 8 அணிகளும் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவை.

அதில் பிரேசில் - 5 முறை (1958, 1962, 1970, 1994, 2002), ஜெர்மனி - 4 முறை (1954, 1974, 1990, 2014), இத்தாலி - 4 முறை (1934, 1938, 1982, 2006), ஆர்ஜென்டீனா - 3 முறை (1978, 1986, 2022), பிரான்ஸ் - 2 முறை (1998, 2018), உருகுவே - 2 முறை (1930, 1950), இங்கிலாந்து - 1 முறை (1966), ஸ்பெயின் - 1 முறை (2010) கோப்பையை வெற்றி முத்தமிட்டுள்ளன.

இன்று நாம் பார்க்கும் உலகக் கோப்பை, 1930-ல் அறிமுகமான அசல் கோப்பை அல்ல. முதல் கோப்பையின் பெயர் 'ஜூல்ஸ் ரிமெட் கோப்பை'.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் கிரிக்கெட்டை தாண்டி பல சர்வதேச போட்டிகள் இருக்கின்றன... அவை என்னென்னு தெரியுமா..?
FIFA Trophy History

FIFA-வின் முதல் தலைவர் ஜூல்ஸ் ரிமெட்டின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஏபெல் லஃப்ளூரால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கோப்பையில், கிரேக்க வெற்றி தேவதையான நைக் ஒரு கோப்பையை ஏந்தியிருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட ஸ்டெர்லிங் வெள்ளியால் செய்யப்பட்ட இது, ஆரம்பத்தில் 'உலகக் கோப்பை' என்றே அறியப்பட்டு, பின்னர் 'தங்க தேவதை' என்று செல்லப்பெயர் பெற்றது.

இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில் — குறிப்பாக ஹிட்லரின் கைகளில் — சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும் வரை மறைத்து வைத்தார்.

அந்தக் கோப்பைக்கு சோதனை திருட்டு வடிவத்திலும் வந்தது. 1966-ல், இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, லண்டனில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருடப்பட்டது. ஒட்டுமொத்த இங்கிலாந்துமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால், 'பிக்கிள்ஸ்' என்ற ஒரு நாய் ஹீரோவாக மாறியது. தனது உரிமையாளருடன் நடைபயிற்சி சென்றபோது, ஒரு செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த தொலைந்துபோன உலகக் கோப்பை பொட்டலத்தை பிக்கிள்ஸ் முகர்ந்து கண்டுபிடித்தது. அந்த ஆண்டு இங்கிலாந்து கோப்பையை வென்றபோது, வெற்றிவிழா விருந்தில் பிக்கிள்ஸும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது.

1970-ல் பிரேசில் அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றபோது, விதிமுறைப்படி அந்த அசல் கோப்பை அவர்களுக்கே நிரந்தரமாக வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்! 1900-ல் நடந்த வினோதம்! 2028-ல் மீண்டும்...?
FIFA Trophy History

அதன்பிறகுதான், இன்று நாம் காணும் 'FIFA உலகக் கோப்பை' என்ற புதிய கோப்பை வடிவமைக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டுப் போட்டிக்காக ஒரு புதிய கோப்பையை வடிவமைத்து உருவாக்க வேண்டியிருந்தது. பல முன்மொழிவுகள் பெறப்பட்ட பிறகு, வெற்றி பெற்ற வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்தாலிய சிற்பி சில்வியோ கசானிகாவின் இரண்டு படைப்புகளில் முதலாவது ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வடிவமைத்த எஸ்.பி.ஏ உலகக் கோப்பை, உலகத்தைத் தாங்கிப் பிடிக்கும் இரு மனிதர்களைச் சித்தரிக்கும் படியாக இருந்தது. இந்த உலகக் கோப்பைக் கோப்பையானது, ஐந்து கிலோகிராம் எடையுள்ள 18 காரட் தங்கத்தால் ஆனது. 1974-ல் மேற்கு ஜெர்மனி அணிதான் இந்தப் புதிய கோப்பையை முதன்முதலில் கைப்பற்றியது.

பிரேசிலுக்கு நிரந்தரமாக வழங்கப்பட்ட அதே ஜூல்ஸ் ரிமெட் கோப்பை, 1983-ல் 1ரியோ டி ஜெனிரோவில் உள்ள பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைமையகத்தில் இருந்து மீண்டும் திருடப்பட்டது. இந்த முறை, அது முழுமையாக மீட்கப்படவே இல்லை.

தங்கத்தால் ஆன தற்போதைய உலகக் கோப்பை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள FIFA அருங்காட்சியகத்தில் தான் உள்ளது. அசல் கோப்பை நிரந்தரமாக இருக்கும்; வெற்றி பெறும் அணிக்கு அதன் பிரதி மட்டுமே வழங்கப்படும். அப்படி வழங்கப்பட்ட ஒரு பிரதியைத்தான், 2014-ல் கோப்பையை வென்ற ஜெர்மனி வீரர்கள் தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சேதப்படுத்தி விட்டனர்.

ஒவ்வொரு முறையும் ஒரு அணி வெல்லும்போது, அசல் கோப்பையின் அடிப்பாகத்தில் அந்த அணியின் பெயர் பொறிக்கப்பட்டு, அதன் வரலாறு புதுப்பிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அணிகளின் பெயர்கள் கீழ் அடித்தள அடுக்கில் பொறிக்கப்படும்; மேலும், 2038 உலகக் கோப்பைக்குப் பிறகு வேறு பெயர்கள் பொறிக்க இடம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நிலவில் விளையாடப்பட்ட முதல் விளையாட்டு எது தெரியுமா? வியக்க வைக்கும் உண்மைகள்!
FIFA Trophy History

இந்தக் கோப்பையை யார் வேண்டுமானாலும் தொட்டுவிட முடியாது. உலகக் கோப்பையை வென்ற வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள் மட்டுமே அசல் கோப்பையை வெறும் கைகளால் தொட முடியும் என்பது எழுதப்படாத விதி. மற்றவர்கள் கையுறைகளை அணிந்தே கோப்பையை தொட வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com