"நானாக இருந்தால் இப்படி செய்திருக்க மாட்டேன்" : கபில் தேவ் வருத்தம்!

கபில் தேவ் &ரவிச்சந்திரன் அஸ்வின்
கபில் தேவ் & ரவிச்சந்திரன் அஸ்வின்
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தது ஏமாற்றம் அளித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கிய தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியிலேயே இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.ஆஸ்வின் தடாலடியாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டு, உடனடியாக தாயகம் திரும்பியது கிரிக்கெட் உலகை ஆச்சரியத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இதன் மூலம் அவரது 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவருக்கு கிரிக்கெட் இன்னாள், முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஸ்வின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில்,

"இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வின் திடீரென கிரிக்கெட்டை விட்டு விலகியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்களுக்கும் இது பெருத்த ஏமாற்றமாக இருந்திருக்கும். அது மட்டுமின்றி அஸ்வின் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை என்பதை பார்க்க முடிந்தது. அவரும் வருத்தத்தில்தான் இருந்தார். இதைவிட சிறந்த முறையில், பிரிவு உபசார போட்டியுடன் விடைபெறுவதற்கு அவர் தகுதியானவர். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அவரை இந்த மாதிரி ஓய்வு பெற விட்டிருக்கமாட்டேன். நிறைய மதிப்பு மற்றும் சந்தோஷத்துடன் வழியனுப்பி இருப்பேன்.

அஸ்வின் இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்து இந்திய மண்ணில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம். ஆனால் ஏன் திடீரென இந்த முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். இந்திய அணிக்காக 106 டெஸ்டில் விளையாடி அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளார். இந்த மிகப்பெரிய மேட்ச் வின்னருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பிரமாண்டமான பிரிவு உபசார விழா நடத்தும் என்று நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.

மேலும் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கருக்கு நிகராக அஸ்வினும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

38 வயதான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 765 விக்கெட்டுகள் சாய்த்து இருக்கிறார். டெஸ்டில் மட்டும் 537 விக்கெட்டுகள் (106 டெஸ்டில்) எடுத்து அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் 2-வது இடத்திலும், ஒட்டுமொத்தத்தில் 7-வது இடத்திலும் உள்ளார்.

இதையும் படியுங்கள்:
கருப்பு தேநீரில் காணாமல் போகும் உடல் நோய்கள்!
கபில் தேவ் &ரவிச்சந்திரன் அஸ்வின்

"கிரிக்கெட்டில் எனது பயணம் தொடரும். எனக்குள் கிரிக்கெட் இன்னும் ஓய்வு பெறவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப்போகிறேன். நான் விரும்பும் வரை, முடிந்த அளவுக்கு நீண்ட காலம் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று அஸ்வின் கூறினார்.

இதையும் படியுங்கள்:
தேனும் இலவங்கப்பட்டையும் சேர்த்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
கபில் தேவ் &ரவிச்சந்திரன் அஸ்வின்


2015-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பும் அஸ்வினை ரூ.9¾ கோடிக்கு அந்த அணி ஏலத்தில் எடுத்தது. இதே போல் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் என்றும் அஸ்வின் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com