இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் ஒரு வீரரை அணிக்கு அழைக்க வேண்டும் என்று தேர்வுக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை தேர்வுக் குழு தலைவர் மறுத்திருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நான்கு போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இதில் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி வென்றது. ஒரு போட்டி ட்ராவிலும், மற்ற இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றியும் பெற்றது. இதனால், ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் இருந்து வருகிறது.
இதற்கு முன்னர், நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால், கேப்டன் ரோஹித் ஷர்மா மீதும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த தோல்விக்கடுத்து பிசிசிஐ கவுதம் கம்பீருக்கு இறுதி வாய்ப்பு வழங்கியது. அதாவது ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதும் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் மட்டுமே பயிற்சியாளர் பதவியில் நீங்கள் தொடர்வீர்கள் என்று பிசிசிஐ கவுதம் கம்பீரிடம் கூறியதாக செய்திகள் கசிந்தன.
அதேபோல் பிசிசிஐ ரோஹித் மற்றும் விராட் போன்ற முன்னணி வீரர்களுக்கும் சில எச்சரிக்கை விடுத்திருந்ததாக செய்திகள் வந்தன.
இப்படியான நிலையில், ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி மோசமாக விளையாடி வருவது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற்றால் மட்டுமே சாம்பியன்ஷிப் தொடரில் முன்னேற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் புஜாராவை சேர்க்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை வைத்ததாகவும் அதனை தேர்வுக்குழு தலைவர் மறுத்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
முன்னணி வீரரான புஜாரா கடந்த 2 சுற்றுப்பயணங்களிலும் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெல்ல பேட்டிங்கில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணியில் முன்னனி பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் சொதப்புவதால், பேட்ஸ்மேன்கள் அவசியம். அதேபோல், பவுலர்களும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.