இந்திய டெஸ்ட் அணியின் புதிய புயல்! யார் இந்த குர்னூர் பிரார்?

இந்திய டெஸ்ட் அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடித்துள்ள குர்னூர் பிரார் யார்?
Gurnoor Brar
Gurnoor Brar source:hindu
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சில் கவனம் ஈர்த்த இளம் வீரர் குர்னூர் பிரார், தற்போது டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துள்ளார். நவம்பர் 14 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நவம்பர் 19ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இது அவரது முதல் டெஸ்ட் அழைப்பாகும்.

பஞ்சாபைச் சேர்ந்த 26 வயதான குர்னூர் பிரார் உயரமான வேகப்பந்து வீச்சாளர். பந்தை நல்ல உயரத்தில் இருந்து வீசும் திறனும், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி கூடுதல் பவுன்ஸ் உருவாக்கும் திறனும் அவருடைய பலமாக கருதப்படுகின்றன. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அந்தத் தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளராகவும் அவர் கவனம் பெற்றுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கிடைத்த இந்த வாய்ப்பை தொடர்ந்து, டெஸ்ட் அணிக்கான அழைப்பும் வந்திருப்பது அவரது வளர்ச்சியில் முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது. இந்தியா ஏ அணிக்காகவும் சமீப மாதங்களில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 22 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது அவரது அனுபவத்தை காட்டுகிறது. நீண்ட நேரம் தொடர்ந்து பந்துவீசும் திறன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானது. அந்த வகையில், அவருக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு திறமையை நிரூபிக்க ஒரு நல்ல மேடையாக அமையலாம்.

இந்திய அணியின் தேர்வு குழு குர்னூர் பிராரை அணியில் சேர்த்த அதே நேரத்தில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டு நாடு திரும்புகிறார்.

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் குர்னூர் பிரார் விளையாட மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக வேறு வீரர் சேர்க்கப்பட மாட்டார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காயத்திலிருந்து மீண்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் வெலிங்டனில் உள்ள இந்திய டெஸ்ட் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் தொடருக்கு முன்பாக அணியின் தயாரிப்பில் மேலும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுடன் குர்னூர் பிராரும் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இன்னும் களமிறங்காத அவருக்கு, அணியின் மூத்த வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்வதும் அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மட்டுமே முதல் போட்டியில் விளையாடுவது உறுதி என்று பொருளல்ல. இறுதி ஆடும் பதினொருவர் தேர்வு ஆடுகளத்தின் நிலை, அணியின் திட்டம், வீரர்களின் உடற்தகுதி ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். எனவே இந்தத் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு என்பது விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு முடிந்து விடுவதில்லை..எதிரணி பேட்ஸ்மேன் களை நீண்ட நேரம் அழுத்தத்தில் வைத்திருப்பதும், ரன்களைக் கட்டுப்படுத்துவதும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.. குறிப்பாக நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில் புதிய பந்தில் கிடைக்கும் ஸ்விங், ஆடுகளத்தில் கிடைக்கும் பவுன்ஸ் ஆகியவற்றைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

உயரமான பந்து வீச்சாளரான குர்னூர் பிராருக்கு இந்த சூழல் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது..பும்ரா , சிராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து செயல்படுவது அவரது பந்து வீச்சிலும் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள உதவும்.. இளம் வீரர்களுக்கு இது போன்ற வெளிநாட்டுத் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களைப் புரிந்து கொள்ளும் சிறந்த அனுபவமாக அமையும் ‌..

இந்திய அணியில் புதிதாக இடம் பிடிக்கும் ஒவ்வொரு இளம் வீரருக்கும் இது தங்களது திறமையை வெளிப்படுத்தக் கிடைக்கும் முக்கியமான வாய்ப்பாகும்.. ஒரு நாள் போட்டிகளில் பெற்ற வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்வது எளிதானதல்ல.. பொறுமை, கட்டுப்பாடு, துல்லியம் ஆகிய மூன்றும் இந்த நீண்ட வடிவிலான ஆட்டத்தில் அவசியம்.. இந்த சவாலை குர்னூர் பிரார் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு..

உள்ளூர் கிரிக்கெட்டில் பெற்ற அனுபவத்தை சர்வதேச அரங்கிலும் வெளிப்படுத்துவதே இப்போது அவரது முக்கிய இலக்காக இருக்கும்.

நியூசிலாந்து ஆடுகளங்களில் கிடைக்கும் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் குர்னூர் பிராருக்கு இது மறக்க முடியாத அறிமுகத் தொடராக அமையலாம். அணியில் இடம்பிடித்திருப்பது முதல் படி; களத்தில் கிடைக்கும் வாய்ப்பை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதே அடுத்த எதிர்பார்ப்பு.

இதையும் படியுங்கள்:
தொடர்கதை: ஜாலியா ஒரு கொலை - அத்தியாயம் 1
Gurnoor Brar