இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான இவர்தான் உலகிலேயே மிகவும் சிறந்தவர் என்று சச்சின் புகழாரம் சூட்டியிருக்கிறார். அது யார் என்று பார்ப்போமா?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று முடிந்தது.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது.
மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது. இதனையடுத்து நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. அதேபோல் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றிபெற்றது.
இதை அடுத்து 3 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலியா அணி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றியது.
ஆனால், இரண்டு அணிகளையும் சேர்த்து பார்த்தாலும் பும்ராவே மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். இதனால் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த தொடரில் பும்ரா 9 இன்னிங்ஸ்களில் மட்டுமே பந்து வீசினார். அதில் மட்டும் 32 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் இருந்தார். மேலும், அவர் 13.06 என்ற பவுலிங் சராசரியை வைத்து இருந்தார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
தொடர் நாயகன் விருதையும் பும்ராவே கைப்பற்றினார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் தனது வலைதள பக்கத்தில் பேசியிருக்கிறார். "இந்த தொடரில் 0 - 1 என்ற நிலையில் இருந்து, 3 - 1 என தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணியின் அதிகாரம் மிக்க செயல்பாட்டை வெளிக்காட்டுகிறது. அவர்கள் பார்டர் - கவாஸ்கர் ட்ராபியை வென்றதற்கு பாராட்டுக்கள். இங்கே நான் ஜஸ்பிரித் பும்ரா பற்றி சிறப்பாக குறிப்பிட விரும்புகிறேன். "ஜஸ்.. இந்த உலகின் சிறந்த வீரர்" என்று பதிவிட்டிருக்கிறார்.