
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் திறமை வாய்ந்த அணிகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. ரசிகர்கள் மத்தியில் மிகச்சிறந்த அணி என்ற நற்பெயரை எடுத்திருந்தாலும், பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை 1998 இல் வென்ற தென்னாப்பிரிக்கா, அதன்பிறகு எந்தக் கோப்பையையும் வெல்லவில்லை. இதனாலேயே விரக்தியில் பல தென்னாப்பிரிக்க வீரர்கள் வெகு விரைவிலேயே ஓய்வு முடிவை எடுத்தனர். இதில் தற்போது அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசெனும் இணைந்து விட்டார்.
நவீன கால கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்திற்கு மிகவும் பிரபலமானவர் ஹென்ரிச் கிளாசென். இவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்டார்.
எந்தவொரு வீரருக்கும் ஓய்வு முடிவு என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படிப்பட்ட கடினமான முடிவை வெகு விரைவிலேயே எடுத்து விட்டார் கிளாசென். 33 வயதாகும் ஹென்ரிக் கிளாசென் இதுவரை 60 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்களுடன் 2,141 ரன்களைக் குவித்துள்ளார். 58 டி20 போட்டிகளில் 1,000 ரன்களையும், 4 டெஸ்ட் போட்டிகளில் 104 ரன்களையும் எடுத்துள்ளார்.
தேசிய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், கிளாசெனால் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என 3 வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியாவிற்கு எதிராகவே அறிமுகமானார் கிளாசென். அப்போதைய விக்கெட் கீப்பர் குயின்டன் டி-காக் காயமடையவே, அந்த வாய்ப்பு கிளாசெனுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அணியின் வெற்றிக்கும் உதவினார்.
பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற ஹென்ரிச் கிளாசென், கல்லூரியில் படிக்கும் போதே கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். கல்லூரி அணியில் சிறப்பாக செயல்பட்டு, அங்கிருந்து முதல் தர கிரிக்கெட்டில் நுழைந்தார். இவரது அதிரடியான ஆட்டம் பல பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உதவியது. ஐபிஎல் தொடரில் முதலில் ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்டாலும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு பெங்களூரு அணியும் இவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சேர்ந்து பிறகே கிளாசெனின் அசுரத்தனமான ஆட்டத்தை ரசிகர்களால் பார்க்க முடிந்தது.
கிழிந்த பந்தைக் கூட 100 மீட்டருக்கும் மேல் சிக்ஸருக்கு விளாசும் திறன் பெற்ற ஒரே வீரர் என வர்ணனையில் புகழப்டுவார் ஹென்ரிச் கிளாசென். ஏழ்மையான சூழலில் பிறந்து கிரிக்கெட்டில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்யும் கிளாசெனை, ‘ஏழைகளின் தோனி’ என தென்னாப்பிரிக்கா தேசிய அகாடமியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பாராட்டியிருந்தார். அப்போது இது சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டாலும், பிறகு கிளாசெனின் அதிரடியான ஆட்டம் அனைவரையும் அமைதியாக்கியது.
சர்வதேச போட்டிகளில் இனி அவரைக் காண முடியாது. இருப்பினும் ஐபிஎல் போன்ற பிரான்சைஸ் தொடர்களில் தொடர்ந்து விளையாட இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கிளாசென்.