இந்திய அணியின் இந்த தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று யுவராஜ் சிங் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று முடிந்தது.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது.
மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது. இதனையடுத்து நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. அதேபோல் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றிபெற்றது.
இதை அடுத்து 3 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலியா அணி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர், நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடியது இந்தியா. அதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் இந்திய அணியின் முக்கிய வீரர்களும், கவுதம் கம்பீரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள்.
இப்படியான நிலையில், யுவராஜ் சிங் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார், “ நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்தது மிகவும் வலிக்கிறது. சொந்த மண்ணில் நாம் 0 - 3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இருக்கிறோம். அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால், ஆஸ்திரேலியாவில் நாம் இரண்டு முறை தொடரை வென்று இருக்கிறோம். எனவே, இந்த முறை தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாகவே ஆதிக்கம் செலுத்தி வருவது தான் காரணம். ஆனால், நாம் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரின் செயல்பாட்டை குறை கூறுகிறோம். இதற்கு முன்னர் அவர்கள் நன்றாக விளையாடி சாதனை படைத்ததை மறந்துவிட்டோம்.
என்னுடைய கருத்து என்னவெனில் வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் நாம் அவர்களைப் பற்றி எளிதாக மோசமாக பேச முடியும். ஆனால், அவர்களுக்கு ஆதரவளிப்பது என்பது கடினமான விஷயம்.” என்று பேசினார்.