பாகிஸ்தான் அணியை பலரும் விமர்சித்து வரும் நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை நான் பாகிஸ்தான் அணியை உருவாக்குவேன் என்று பேசியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி வீரர்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இதனால், இந்திய ரசிகர்கள் பெரும் குஷியில் இருந்தாலும், பாகிஸ்தான் வீரர்கள் தனது சொந்த வீரர்களையே சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஏனெனில், பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியும் தோல்வியில் முடிந்தது. இதனால், முதல் அணியாக பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறுகிறது.
இதனால், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அணி வீரர்களையும், நிர்வாகத்தையும் கடுமையாக பேசியிருந்தார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவும் கிடையாது, என்ன செய்ய வேண்டும் எனவும் தெரியவில்லை என்று சோயித் அக்தர் கூறினார். என் வாழ்நாளில் இது போன்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. மிக மோசமான நிகழ்வு இது என்று வசீம் அக்ரம் பேசினார்.
சொந்த நாட்டு முன்னாள் வீரர்களே இப்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அவர்களின் கருத்துக்களுக்கு விளக்கமளித்துள்ளார். “வாசிம் அக்ரம் போன்ற பெரிய வீரர்களே இப்படி பேசுகிறார்கள். அதற்கு உடன் இருப்பவர்கள் சிரிக்கிறார்கள். அக்தர் எவ்வளவு பெரிய வீரர். அவர் இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இது எவ்வளவு கேவலமான விஷயம். நீங்கள் இங்கு உட்கார்ந்து பணம் சம்பாதித்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் சென்று முகாம் அமைத்து, உங்கள் அணி உலகக் கோப்பையை வெல்ல உதவி செய்யுங்கள்.
ஒருவேளை நான் பாகிஸ்தான் சென்றால், ஒரே வருடத்தில் அந்த அணியை சிறப்பானதாக மாற்றுவேன். நீங்கள் அனைவரும் என்னை நினைவில் வைத்துக் கொள்வீர்கள். இது எல்லாம் பேரார்வத்தில் இருந்து வருகிறது. நான் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பயிற்சி கொடுப்பேன். இதற்காக ரத்தத்தையும் வியர்வையையும் அர்ப்பணிக்க வேண்டும். கிரிக்கெட் வர்ணனைப் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு பேசுவது எந்த மாற்றத்தையும் உருவாக்காது” என்று பேசியிருக்கிறார்.