
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. 1996 உலகக் கோப்பை கிரிக்கெட்குப் பிறகு பாகிஸ்தான் முதல் முறையாக ஐ.சி.சி நிகழ்வை நடத்துவதால் இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் சவால்களை எதிர்த்து முன்னேற போராடும் என்பதால் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்நிலையில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும். இது கடந்த போட்டியை விட 53 சதவீதம் அதிகமாகும்.
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.19½ கோடி பரிசுத்தொகை கிடைக்கும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.9¾ கோடியும், அதே சமயம் அரைஇறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.4.86 கோடியும் வழங்கப்படும்.
ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தைப் பிடித்த அணிகள் தலா ரூ.3 கோடி சம்பாதிக்கும் அதே வேளையில் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கும் அணிகள் தலா ரூ.1.2 கோடி பரிசுத்தொகையை பெறுவார்கள். இது தவிர, லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.30 லட்சம் கிட்டும். அத்துடன் கூடுதலாக ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.08 கோடி போட்டி கட்டணமாக அளிக்கப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு போட்டியின் வடிவத்தில், போட்டியிடும் எட்டு நாடுகள் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும், அந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதன் நீண்ட கால இடத்தை உறுதிசெய்யும் வகையில், ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்றும் ஐசிசி உறுதி செய்துள்ளது. இதற்கிடையில், பெண்கள் கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் முதல் மகளிர் சாம்பியன்ஸ் டிராபி 2027-ம் ஆண்டில் T20 வடிவத்தில் தொடங்கப்படும்.
2017-ம் ஆண்டு நடைபெற்ற 8-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. 7 வருடங்கள் கழித்து வரும் 19-ம்தேதி தொடங்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.