
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் (பிப்.6, பிப்.9 மற்றும் பிப்.12) விளையாடுகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் நாக்பூரில் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. விராட் கோலிக்கு, பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் இந்த போட்டியில் ஆடவில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களம் இறங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சால்ட் மற்றும் டக்கெட் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய நிலையில் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்த போது இந்த ஜோடி பிரிந்தது. சால்ட் 43 ரன்னிலும், அவரை தொடர்ந்து டக்கெட் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஹாரி புரூக் டக், ஜோ ரூட் சொற்ப ரன்களில் அடுத்தடுத்த ஆட்டம் இழக்க இந்த இக்கட்டான நிலையிலிருந்து அணியை மீட்டெடுக்க பட்லர் மற்றும் பெத்தேல் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.
ஆனாலும் இந்திய வீரர்களின் மாயாஜல பந்து வீச்சால் பட்லர், பெத்தேல் அவுட்டாக அடுத்து வந்த ஆர்ச்சர் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தவுடன் அவர்களின் ரன்ரேட் மறுபடியும் சுருங்கியது. முடிவில் இங்கிலாந்து அணி 47.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 248 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இந்தியா அணியின் ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 15 ரன்னிலும், ரோகித் சர்மா 2 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 19 ரன்னுக்குள் தொடக்க வீரர்கள் அடங்கியதால் இந்தியா கடும் நெருக்கடிக்குள்ளானது.
இதன்பின் களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் - சுப்மன் கில், இங்கிலாந்து அணியின் வீச்சை பந்தாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதுடன், வெற்றிப்பாதைக்கும் அழைத்து சென்றனர். ஸ்ரேயாஸ், பிரைடன் கார்ஸ் ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகளை தெறிக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவரது அதிரடி ஜாலத்தால் 30 பந்துகளில் தனது 19-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அணியின் ஸ்கோர் 113 ஆக எட்டிய போது ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்களில் அவுட் ஆக, இதையடுத்து சுப்மன் கில்லுடன், ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். கடைசியில் இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 9-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.