டி20 உலகக்கோப்பை தொடர் நாளை பிப்ரவரி 7 தொடங்கி மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் டி20 யின் 10 சீசன்கள் நடைபெற்ற இடம் வென்ற அணிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
முதல் டி20 உலக கோப்பை :
தென் ஆப்பிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 12 அணிகள் பங்கேற்ற அறிமுக டி20 உலக கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது .
இரண்டாவது டி20 உலக கோப்பை :
இங்கிலாந்தில் 2009 ஆம் ஆண்டு இரண்டாவது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் முதல் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மூன்றாவது டி20 உலக கோப்பை :
மூன்றாவது t20 உலக கோப்பை தொடர் மேற்கிந்திய தீவுகளில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.
நான்காவது டி20 உலக கோப்பை :
நான்காவது டி20 உலக கோப்பை தொடர் இலங்கையில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஐந்தாவது டி20 உலக கோப்பை தொடர் :
ஐந்தாவது டி20 உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது .இதில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
ஆறாவது டி20 உலகக் கோப்பை தொடர் :
2016 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆறாவது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் :
ஐந்தாண்டு இடைவெளிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி முதல் முதலாக கோப்பையை கைப்பற்றியது.
எட்டாவது உலகக் கோப்பை தொடர் :
ஆஸ்திரேலியாவில் எட்டாவது உலகக்கோப்பை தொடர் 2022ல் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது.
ஒன்பதாவது உலகக்கோப்பை தொடர் :
ஒன்பதாவது உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் 2024 ஆம் ஆண்டு 20 அணிகளுடன் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
பத்தாவது டி20 உலக கோப்பை தொடர் :
இந்தியா மற்றும் இலங்கையில் இந்த வருடம் 2026 இல் ஐசிசி பத்தாவது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் நான்கு பிரிவுகளில் இந்தியா ஏ பிரிவில் சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்க உள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி நாளை முதல் மார்ச் எட்டாம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்பதே 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.