

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை நாளை வெளியாக உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பை, ஆப்பிரிக்காவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அட்டவணை எப்போது வெளியாகிறது..
2027 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணை தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 1ஆம் தேதி கேப் டவுனில் நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா இணைந்து அட்டவணையை வெளியிட உள்ளன. அதே நாளில் உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்பான ஆரம்ப அறிவிப்புகளும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை வெளியான பிறகு எந்த அணிகள் எந்த தேதியில், எந்த மைதானத்தில் மோதுகின்றன என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் ரசிகர்களுக்குத் தெரியவரும். இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்த எதிர்பார்ப்பும் இதனால் மேலும் அதிகரித்துள்ளது.
14 அணிகள் பங்கேற்பு :
2027 உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் 10 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன. மற்ற அணிகளில் சில, செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி ஐசிசி ஒருநாள் தரவரிசையின் அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெறுகின்றன.
மீதமுள்ள நான்கு இடங்களுக்காக தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
குறிப்பாக மேற்கிந்தியத் தீவுகள் நேரடியாகத் தகுதி பெற முடியாமல் தகுதிச்சுற்றில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தகுதிச்சுற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.
இந்த உலகக் கோப்பை 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியும் தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருவதுடன், அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.
இந்திய அணிக்கான எதிர்பார்ப்பு :
2027 உலகக் கோப்பையை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் பயணமும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.. கடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி அடுத்த உலகக் கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் தற்போது முதல் அணி வீரர்களுடன் புதிய தலைமுறை வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதால் 2027- ல் களமிறங்கும் இந்திய அணியின் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்பதும் சுவாரஸ்யமான கேள்வியாக உள்ளது.
உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுவதால் வெவ்வேறு மைதானங்களின் ஆடுகளத் தன்மையும் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்கலாம்.. வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என அனைத்து துறைகளிலும் சமநிலையான அணியை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கும்.
குறிப்பாக வெளிநாட்டு மைதானங்களில் விளையாடுவதற்கான தயாரிப்பை இந்திய அணி முன்கூட்டியே தொடங்க வேண்டி இருக்கும்.. அதிகாரப் பூர்வ அட்டவணை வெளியானதும் இந்திய அணியின் போட்டிகள் எந்த நகரங்களில் நடைபெறுகின்றன என்பதும் தெரிந்து விடும்.. இதன் மூலம் ரசிகர்கள் போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான பயணத் திட்டங்களையும் முன்கூட்டியே அமைத்துக் கொள்ள முடியும்..
ரசிகர்களின் கவனம் :
அட்டவணை வெளியானதும் போட்டிகளின் தேதிகள் மட்டும் அல்லாமல் தொடக்கப் போட்டி, முக்கிய அணிகளுக்கு இடையிலான மோதல்கள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் இடங்கள் போன்ற விபரங்களும் கவனம் பெறும்.. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் போட்டி இடம் பெறும் நாள் மற்றும் மைதானம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கும்.
மேலும் போட்டிகள் நடைபெறும் நகரங்கிளின் வானிலை, மைதானங்களின் தன்மை, பயண வசதிகள் போன்றவையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.. அட்டவணை வெளியான பிறகு உலகக் கோப்பைக்கான அணிகளின் தயாரிப்பு, வீரர்களின் தேர்வு மற்றும் தொடரின் எதிர்பார்ப்புகள் குறித்த விவாதங்களும் கிரிக்கெட் உலகில் சூடுபிடிக்கும்.. இதனால் நாளைய அதிகாரப் பூர்வ அறிவிப்பு 2027 உலகக் கோப்பைக்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது..
உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு வருடத்துக்கும் மேல் இருக்கும் நிலையில், நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ அட்டவணை போட்டிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும். எந்த அணிக்கு எதிராக இந்தியா எப்போது விளையாடுகிறது, எந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் நாளை முதல் தெளிவாகத் தெரியவரும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2027 உலகக் கோப்பைக்கான காத்திருப்பைத் தொடங்கிவைக்கும் முக்கிய நாளாக அக்டோபர் 1 அமைய உள்ளது.