
வெள்ளைப் பந்து பயன்படுத்தப்படும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலகக்கோப்பைத் தொடர் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சிவப்பு பந்து பயன்படுத்தப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கும் உலகக்கோப்பையை நடத்த வேண்டும் என 90-களின் காலகட்டத்தில் இருந்தே பேச்சுகள் அடிபட்டன. இருப்பினும் இதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தமையால், ஐசிசி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. பிறகு எப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடர் உருவானது என்ற வரலாற்றை இப்போது பார்ப்போம்.
கிரிக்கெட்டில் மிக நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. டெஸ்ட் போட்டிகளின் தரத்தை மீட்டெடுக்கவும், ரசிகர்களை ஈர்க்கவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடர் அவசியம் என்பதை 1996 இல் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிளைவ் லாய்ட் தெரிவித்திருந்தார். அதன்பிறகு பல்வேறு கட்ட ஆலோசனைகள் இது தொடர்பாக நடைபெற்றன.
இருப்பினும் நாக் அவுட் சுற்றுகளில் டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகி விட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் நீடித்தது. அதுவும் இல்லாமல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் 5 நாட்கள் நடக்கும் என்பதால், இது ஒரு மிக நீண்ட தொடராக அமைந்து விடும் எனவும் ஐசிசி கருதியது. பல சிக்கல்கள் இருந்ததால் தான் பல வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் உலகக்கோப்பைத் தொடரை நடத்த முடியாமல் திண்டாடி வந்தது ஐசிசி.
பிறகு 2009 இல் மீண்டும் இந்தப் பேச்சு அடிபட்டது. அப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக, 4 வருடங்களுக்கு ஒருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆலோசனையை வழங்கியதில் முக்கிய பங்கு வகித்தார் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ். உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை நடத்த சிறந்த இடம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம் தான் என அப்போதே தேர்ந்தெடுத்து விட்டனர். ஆனால் மீண்டும் இந்த அறிவிப்பு 2017 வரை கைவிடப்படும் என ஐசிசி அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
2017-க்கு பிறகு மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்துவது குறித்து ஆலோசனை செய்தது ஐசிசி. இதில் டெஸ்ட் தரவரிசையில் உள்ள முதல் 8 அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடருக்கான போட்டிகளில் பங்கேற்பார்கள் என அறிவித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒவ்வொரு அணியும் உள்ளூரில் 3 தொடர்கள் மற்றும் வெளிநாட்டில் 3 தொடர்களை விளையாடும். முடிவில் டாப் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என அறிவிப்பு வெளியானது.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடர் 2019 - 2021 வரை நடைபெற்றது. இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே திட்டமிட்டது போல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. துரதிர்ஷ்டவசமாக விராட் கோலி தலையமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தோற்க, நியூசிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடர் 2021 - 2023 வரை நடைபெற்றது. இதில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெற்றிவாகை சூடியது.
2023 - 2025 வரையிலான 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், ஜூன் 11 முதல் 16 வரை நடைபெறும் இப்போட்டியில் யார் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.