
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஐசிசி நடத்தும் தொடர்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். அவ்வகையில் நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. 2021 மற்றும் 2023 இல் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது. இம்முறை இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தோல்வியால் மூன்றாம் இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி இவ்விரு அணிகளும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இரண்டு தரமான அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி என்பதால், இப்போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்நிலையில் இறுதிப்போட்டியில் விளையாடப் போகும் இரு அணி வீரர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியில் ஒரு தமிழக வீரர் இடம் பெற்றிருப்பது, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. யார் அந்த தமிழ்நாட்டு வீரர் தெரியுமா?
தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருக்கும் தமிழ்நாட்டு வீரர் தான் சேனுரான் முத்துசாமி. தென்னாப்பிரிக்கா அணியில் தமிழக வீரர் எப்படி வந்தார் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாக கொண்டவர் சேனுரான் முத்துசாமி. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தமிழ்நாட்டுடனான தொடர்பை இன்னும் இவர் விட்டுவிடவில்லை.
முத்துசாமி 2 முறை நாகப்பட்டினத்திற்கு வந்து தனது உறவினர்களைச் சந்தித்து உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் சேனுரான் முத்துசாமி.
இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என ஆல்ரவுண்டராக இவர் களத்தில் ஜொலித்தார். ஒரு நல்ல ஆல்ரவுண்டருக்கான திறமையுடன் களத்தில் மிளிரும் முத்துசாமியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தேசிய அணிக்குள் இணைத்துக் கொண்டது. சேனுரான் முத்துசாமி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது கூட இந்திய அணிக்கு எதிராகத் தான். 2019 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சேனுரான் முத்துசாமி, விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி தனது விக்கெட் கணக்கைத் தொடங்கினார்.
தொடர்ந்து இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், இதுவரை வெறும் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இருப்பினும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் பலனாக, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டிக்கு விளையாட தேர்வாகி இருக்கிறார்.
முதல்தர கிரிக்கெட்டில் 9 சதங்களுடன் 5,111 ரன்களைக் குவித்திருக்கும் முத்துசாமி, 262 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜாவுடன் இணைந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டியில் களம் காண இருக்கிறார் சேனுரான் முத்துசாமி.
இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறாவிட்டாலும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட ஒரு வீரர் இறுதிப்போட்டியில் விளையாடுவது இந்தியாவிற்கே பெருமை தான்.