ILT20 ஏலத்தில் விலை போகாத ‘அஸ்வின்’...ரூ.1 கோடியா என அதிர்ச்சியான அணிகள்...!!
இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் தொடங்கிய ILT20 தொடர் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், அபுதாபி நைட் ரைடர்ஸ், டெசர்ட் வைப்பர்ஸ், துபாய் கேப்பிடல்ஸ், கல்ஃப் ஜெயின்ட்ஸ், எம்ஐ எமிரேட்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ் என மொத்தம் 6 அணிகள் ILT20 தொடரில் விளையாடுகின்றன.
இந்நிலையில், ILT20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் நேற்று (அக்டோபர் 1-ந்தேதி) துபாயில் நடைபெற்றது.
இந்த 2026-ம் ஆண்டுக்கான ILT20 தொடருக்கான ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், பியூஷ் சாவ்லா, அன்கித் ராஜ்புத், சித்தார்த் கௌல், பிரியங்க் பாஞ்சல் போன்ற சில இந்திய வீரர்களும் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர்.
இதில் அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும். மேலும் இவர்தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரவிசந்திரன் அஸ்வினை யாருமே ஏலம் கேட்கவில்லை. அஸ்வினை ILT20 தொடரில் தேர்வு செய்யப்படாததற்கு, அவருடைய அடிப்படை விலை மிகவும் அதிகம் என்பது தான் காரணமாக கூறப்படுகிறது.
அதே சமயம் அஸ்வின் வரும் நவம்பர் மாதம் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் விளையாடுகிறார். அதன்பின் பிக் பாஸ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் கடந்தாண்டு டிசம்பரில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட உள்ளதாக தெரிவித்த அவர், 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அஸ்வின் தெரிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்தியவரான அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒதுங்கியதால் அவருக்கு பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
இதுவரை இந்திய அணிக்காக 65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 72 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரில் 221 போட்டியில் விளையாடி 187 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.