
கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த வீரர்கள் வெகு சிலரே. பந்துவீச்சாளர்கள் நிகழ்த்தும் சாதனைகள் கூட ஒருசில ஆண்டுகள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் அளவுக்கு பந்துவீச்சாளர்கள் புகழப்படுவதில்லை. ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்திய வீரர்கள் தவிர்த்து, வெளிநாட்டு வீரர்களும் இவரது அபார பந்துவீச்சைப் புகழ்கின்றனர். அவ்வகையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஒருவர், நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
முந்தைய காலங்களில் இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் வெற்றி பெற முடியாமல் தவித்தது. ஏனெனில் இந்த மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வெளிநாட்டு மைதானங்களில் விக்கெட் எடுக்கத் திணறினர். அதற்கேற்ப பேட்ஸ்மேன்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவுட் ஆனார்கள். ஆனால், சமீப காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்தியா. இதற்கெல்லாம் முக்கிய காரணமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான். அதிலும் குறிப்பாக ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு உலகளவில் பிரபலமானது.
வித்தியாசமான ஆக்ஷனில் பந்து வீசும் பும்ராவை எதிர்கொள்ள, எதிரணி பேட்ஸ்மேன்கள் தள்ளாடுகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2024/25 பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார் பும்ரா. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ராவை எதிர்கொள்வது சவால் நிறைந்தது என ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் நான் ஜஸ்பிரீத் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்ராத் மேலும் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரையில் பும்ரா கிளாஸான வீரர். சூழ்நிலைக்கேற்ப பந்து வீசும் பும்ரா மிகவும் தனித்துவமானவர். கடைசி 2 அடிகளில் வலுவாக பந்து வீசுகிறார். பந்து வீசும் போது, பும்ராவின் முழங்கை நீள்கிறது. இந்தப் பிரச்சினை எனக்கும் இருந்தது. ஆனால், அவர் இதனை நேர்த்தியாக சமாளித்து விடுகிறார். பும்ரா இளமையாக இருந்த தருணத்தில் நான் அவரை சந்தித்துள்ளேன். கிரிக்கெட்டில் பும்ராவின் வளர்ச்சி நம்ப முடியாதது; இவரது புள்ளி விவரங்களும் நம்ப முடியாதவை. இந்திய அணியின் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் பும்ரா, இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் ஒருதலைப் பட்சமாக தான் இருந்திருக்கும். பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் நான் என்பதை சொல்வதில் எனக்குப் பெருமையாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் கிளென் மெக்ராத். 1990 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா கொடிகட்டிப் பறந்ததற்கு இவரும் ஒரு முக்கய காரணம். ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பௌலர், இந்தியப் பௌலரைப் புகழ்வதும், ரசிகன் என்று சொல்வதும் பும்ராவிற்கு நிச்சயமாக பெருமையாக இருக்கும். ஆகச் சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவின் விக்கெட் வேட்டை இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும் என்பதில் ஐயமில்லை.