
இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருதாக கருதப்படும் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த விருதுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கங்கள் மூலமோ மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதில் இருந்து விருதுக்குரியவர்களை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்து, விளையாட்டு அமைச்சத்துக்கு சமர்ப்பித்தது. அதன் தொடர்ச்சியாக விருது பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
2024-ம் ஆண்டில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் நடந்ததால் அதில் பதக்கம் வென்றவர்களுக்கு விருதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன்குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
22 வயதான மனு பாக்கர் ஒலிம்பிக் போட்டிகளின் ஒரே பதிப்பில் இரண்டு பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீராங்கனை ஆனார்.
சமீபத்தில், கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் மனுவின் பெயர் விடுபட்டதாக சில செய்திகள் வெளியானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனுவின் தந்தை ராம் கிஷன் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா ஆகியோர் ஸ்னப் (snub) மீது குற்றம் சாட்டினர். இருப்பினும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தன் பங்கில் தவறிழைத்திருக்கலாம் என்று மனு பாக்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருந்தார். ஆனால் இதற்கிடையே மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், 18 வயதான குகேஷ், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தின் துளசிமதி, மனிஷா, நித்ய ஸ்ரீ மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் உள்பட 32 பேர் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா வாழ்நாள் சாதனையாளர்கள் விருதில் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். தடகளத்தில் சுச்சா சிங்கும், பாரா நீச்சல் போட்டியில் இடம் பெற்ற முரளிகாந்த் ராஜாராம் பெட்கரும் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது பட்டியலில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
'விருது பெற்றவர்கள் ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து விருதுகளைப் பெறுவார்கள்' என்று விளையாட்டு அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும், அர்ஜூனா மற்றும் துரோணச்சார்யா விருதுடன் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.