

மெல்போர்னில் இன்று நடைபெற்ற 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை பெற்றதுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியுள்ளது.
இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் வெள்ளிக்கிழமை நடந்தது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆரம்பம் முதலே சொதப்ப தொடங்கியது.
தொடக்க வீரர் சுப்மன் கில் மிகவும் நிதானமாக ஆடத் தொடங்கிய நிலையில் 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேற அடுத்து மூன்றாம் வரிசையில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்தப் போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய சஞ்சு சம்சன் அதிரடியாக ரன் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வெளியேற, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் மற்றும் திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதை அடுத்து, ஐந்து ஓவர்களில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி படுமோசமான நிலைக்குச் சென்றது.
கடைசியாக ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
அதனையடுத்து டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மிட்செல் மார்ஷ் 46 ரன்களிலும் அடுத்து வந்த டிம் டேவிட் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இருப்பினும் ஜோஷ் இங்லிஸ், மிட்செல் ஓவன் நின்று விளையாடி ஆஸ்திரேலிய அணி வெறும் 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 126 ரன்கள் என்ற இலக்கை வெறும் 13.2 ஓவரில் எட்டி அசத்தியுள்ளது.
இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஏற்கனவே, இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என இழந்திருந்தது. தற்போது டி20 தொடரிலும் இந்திய அணி தடுமாற்றத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது.