இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்த இரண்டு வீரர்களைத் தூக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை சேருங்கள் என்று கூறியிருக்கிறார் சுனில் கவஸ்கர்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது.
இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது. இதனையடுத்து நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
இந்திய அணியை பொறுத்தவரை அடுத்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது. இந்திய அணி வேகப்பந்து வீச்சுக்கு முழுக்க முழுக்க பும்ராவையே நம்பி இருக்கிறது.
பும்ராவின் ஓவர் முடிந்துவிட்டால், அடுத்து ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது. இதனால், பும்ராவை கட்டாயப்படுத்தி, மீண்டும் ஓவர்களை வீச வைக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகள் காரணமாக, பும்ரா ஓய்வின்றி அதிக ஓவர்களை வீச வேண்டிய தேவையும் இருக்கிறது. பும்ராவுக்கு சரியான பார்ட்னர்ஷிப் பௌலர் இல்லாததுதான் இத்தனைக்கும் காரணம்.
பும்ராவுக்கு பார்டனர்ஷிப் பவுலராக இருக்கும் சிராஜுக்கு, ஆஸ்திரேலியா பிட்ச் சரிவரவில்லை. அவரது பவுன்சர் பந்துகள் வேலைக்கே ஆகவில்லை. இன்ஸ்விங் பந்துகளை மட்டும்தான், அவரால் வீச முடிகிறது. இது அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைகிறது.
இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவஸ்கர் இதுகுறித்து பேசியிருக்கிறார். “முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசவில்லை. இவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத காரணத்தினால், இந்திய அணி கடுமையாக பாதிக்கிறது. கடைசி டெஸ்ட் மிகவும் முக்கியமானது. இதில், இந்த இருவரையும் நீக்கிவிட்டு, புதிதாக 2 பௌலர்களை இந்திய அணி நிர்வாகம் சேர்க்க வேண்டும். வெற்றியைப் பெற வேண்டும் என்றால், இது மாதிரியான கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.” என்று பேசியுள்ளார்.