
இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இது மிகவும் சோதனையான கால கட்டம் , இந்தியாவின் ஆடவர் அணியும் மகளிர் அணியும் தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருவது ரசிகர்களை கவலைக் குள்ளாக்கியுள்ளது. டிச 8 ,நேற்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஆலன் பார்டர் பீல்டில் மகளிர் அணி இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் ஜார்ஜியா ஜோடி விக்கெட் இழப்பின்றி 130 ரன்கள் குவித்தது. அடுத்து 60 ரன்களில் ஃபோப் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த எல்லீஸ் பெர்ரி தனது ருத்ர தாண்டவத்தை துவங்கினார். விரைவில் ஜார்ஜியாவும், பெர்ரியும் சதமடித்தனர். எல்லீஸ் பெர்ரி தனது மூன்றாவது சதத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் 7000 ரன்களையும் 300 விக்கட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
ஆஸி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் என்ற மிகவும் வலுவான ஸ்கோரை எட்டியிருந்தது. அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் 371/8 என்ற பிரம்மாண்ட இலக்கை ஆஸி அணி எட்டியிருந்தது. இந்திய அணி சார்பில் சைமா தாக்கூர் 3 விக்கட்டுக்களையும் , அறிமுக வீராங்கனை மின்னு மணி 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்கள்.
கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் ரிச்சா கோஷ் 54 ரன்கள் எடுத்தார். மறுபுறத்தில் ஸ்மிருதி, ஹர்லின் தியோல் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 11வது ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது. கேப்டன் ஹர்மன் நிலைத்து நின்று அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். வழக்கம் போல ஜெமிமா உறுதியான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். ஹர்மன் 38 ரன்களும் ஜெமிமா 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அறிமுக ஆட்டக்காரரான மின்னு மணி 46 ரன்கள் குவித்து தன் தேர்வினை நியாயப்படுத்தினார். இறுதி வரை மின்னு களத்தில் நின்று போராடினாலும் இந்திய அணியின் மற்ற ஆட்டக்காரார்கள் அவருக்கு ஒத்துழைப்பை நல்கவில்லை. இறுதியில் இந்திய அணி 44.5வது ஓவரில் 249/10 ரன்களுடன் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ஆஸி அணியின் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸியிடம் இழந்தது இந்திய அணி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸி அணியின் எல்லீஸ் பெர்ரி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் 2 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதால், தொடர் ஆஸி அணியின் வசம் சென்று விட்டது .
இந்திய அணியை பொறுத்த வரை பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். முதல் 6 பேட்ஸ்மன்கள் சரியாக களத்தில் நின்றால் தான் அணி எதிர்காலத்தில் வெற்றி பெற இயலும்.
இனி வரும் மூன்றாவது போட்டி முக்கியத்துவம் அற்றது. ஆயினும், இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என்பது கேள்வியாக உள்ளது. மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி பெர்த்தில் டிச 11, புதன்கிழமை அன்று நடைபெறுகிறது.