
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 25-ம்தேதி சென்னையில் நடந்த 2-வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
ராஜ்கோட்டில் நடந்த இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது ஓவர் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4-வது ஓவர் போட்டி புனேயில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 3-வது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாட தொடங்கியது. ஆனால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியாஅணி தடுமாற தொடங்கியது. ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்தது இந்தியா அணி.
79 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த இந்திய அணியை, ஷிவம் துபேவும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து அணியை சிக்கலில் இருந்து மீட்க உதவினர். பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் 166-ஐ எட்டிய போது ஹர்திக் பாண்ட்யா 53 ரன்களில்அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 181 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் சேர்ந்து 62 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வந்தனர். இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த அசத்தான வெற்றியின் மூலம் 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் நாளை நடக்க உள்ளது.