
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி , இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் , ஒவ்வொரு அணியும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து தொடரில் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் ஜூலை 10 ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் 3 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. லார்ட்ஸ் மைதானம் 1814 ஆம் ஆண்டு முதன் முறையாக திறக்கப்பட்டது. உலகின் மிகப் பழமையான கிரிக்கட் மைதானமாக இது உள்ளது. டாசை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்தின் சார்பில் ஸாக் கிராலி மற்றும் பென் டக்கட் ஆட்டத்தை துவங்கினார்கள்.13 வது ஓவரில் பென் டக்கட் 23 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவர் முடிவில் ஸாக் கிராலியும் 18 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஒலி போப்பும் ஜோ ரூட்டும் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை குவித்திருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் அரை சதம் கடந்திருந்த ஜோ ரூட்(104) இரண்டாவது நாளில் சதத்தினை கடந்தார். ஜேமி ஸ்மித்(51) மற்றும் பிரைடன் கார்ஸ் (56) ஆகியோரின் அரை சதங்களில் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 387 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இரண்டாவது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை துவங்கியது. ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ராகுல் இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் இந்த போட்டியில் 16 ரன்களில் வெளியேறினார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ராகுல் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரிஷப் பண்ட் (74) மற்றும் ரவீந்திர ஜடேஜா(72) ஆகியோரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணியின் பின் வரிசை சொதப்ப முதல் இன்னிங்ஸ் முடிவில் , இந்திய அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. இங்கிலாந்து அணி 2 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது.
4 வது நாளில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தடுமாற தொடங்கியது. அதிகபட்சமாக ஜோ ரூட் மட்டுமே 40 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 192 ரன்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இந்திய அணி தனது 2 வது இன்னிக்சை 4 வது நாளில் தொடங்கியது. ஆரம்பத்திலேயே துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதற்குள் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய தொடங்க 4 வது நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது.
5 வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் ஏற்கனவே சரிந்து விட்டது. ரவீந்திர ஜடேஜா தனி ஆளாக போராடினார். அவருக்கு எதிர்ப்புறம் ஒத்துழைப்பு கொடுக்க ஆள் இல்லை. இறுதியில் இந்திய அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசிய போதிலும் பேட்டிங்கில் பின்தங்கி விட்டது. தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி இரண்டு தோல்விகள் மூலம் சர்வதேச டெஸ்ட் தர வரிசையில் பின்தங்கி விட்டது. 2 வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.