பாகிஸ்தானில் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் பிசிசிஐ செய்த செயலால் சர்ச்சை வெடித்திருக்கிறது. அதுபற்றி முழுமையாகப் பார்ப்போம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும். இந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும்.
8 அணிகள் போட்டியிடும் இந்த தொடரில் 15 போட்டிகள் நடைபெறும். அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கின்றன.
இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.
ஏனெனில், சில மாதங்களாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டார்கள், ஆகையால் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் தொடர்ந்து நிராகரித்து வந்தது. இறுதியாக சில விதிகளுடன் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. அதாவது 2027ம் ஆண்டு வரை பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வந்து விளையாடாது என்று கூறிவிட்டது. இப்படி ஏற்கனவே சிக்கல் இருந்து முடிவுக்கு வந்தது.
ஆனால் மீண்டும் இப்போது ஒரு சிக்கல் வந்திருக்கிறது. அதாவது போட்டி நடத்தும் நாட்டின் பெயர் ஜெர்சியில் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் பெயர் இல்லாத ஜெர்சியைத்தான் இந்திய அணி வீரர்கள் அணிவார்கள். நாங்கள் துபாயில் தான் விளையாடுகிறோம். பாகிஸ்தானில் அல்ல. அப்படி இருக்கையில் பாகிஸ்தான் பெயர் பொரிக்கப்பட்ட ஜெர்சியை இந்திய வீரர்கள் அணிவது எப்படி சரியாக இருக்கும் என ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “பிசிசிஐ கிரிக்கெட்டிற்குள் அரசியலைக் கொண்டு வருகிறது. முதலில் பாகிஸ்தான் வர மறுத்தது. பின்னர் இந்திய கேப்டனை குழு புகைப்படங்களுக்கு அனுப்ப மறுத்தது. தற்போது ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை அச்சிட மறுத்துள்ளது. ஐசிசி எங்களுடன் நிற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.