
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானையும் வெற்றி கொண்டது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கிய 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
மழையால் அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிர்தி மந்தனாவும் அருமையான தொடக்கம் தந்தனர்.
இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் (10.2 ஓவர்) எடுத்த நிலையில் பிரிந்தனர். பிரதிகா ராவல் 37 ரன்னிலும், ஸ்மிர்தி மந்தனா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஹர்லீன் தியோல் 13 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 9 ரன்னிலும், தீப்தி ஷர்மா 4 ரன்னிலும் சீரான இடைவெளியில் நடையை கட்டினர். அப்போது இந்தியா 26 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 102 ரன்களுடன் தடுமாற தொடங்கியது.
7-வது விக்கெட்டுக்கு அமன்ஜோத் கவுரும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோசும் இணைய ஆட்டம் சூடுபிடித்தது. அணியின் ஸ்கோர் 153-ஐ எட்டிய போது அமன்ஜோத் கவுர் 13 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேற, அதனை தொடர்ந்து, ஆல்-ரவுண்டர் சினே ராணா இறங்கினார். கடைசி கட்டத்தில் அவரும், ரிச்சா கோசும் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை வெளுத்து வாங்க ஸ்கோரும் மளமளவென எகிறியது. அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 94 ரன்னில் வெளியேற, அதனை தொடர்ந்து சினே ராணா 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 49.5 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எக்ஸ்டிரா வகையில் 24 வைடு உள்பட 25 ரன்கள் கிடைத்தது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் குளோயி டிரையான் 3 விக்கெட்டும், மிலாபா, நடினே டி கிளெர்க், மரிஜானா காப் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்த் நின்று ஆட, இன்னொரு பக்கம் தஸ்மின் பிரிட்ஸ் (0), சுனே லுஸ் 5 ரன்னிலும், மரிஜானே காப் 20 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். வோல்வார்ட் தனது பங்குக்கு 70 ரன் எடுத்தார்.
இதன் பிறகு டிரையானும் 49 ரன்னில் வெளியேற, அதனையடுத்து, அதிரடியாக விளையாடிய நடினே டி கிளெர்க்கு கடைசி 3 ஓவர்களில் மட்டும் 4 சிக்சர், 3 பவுண்டரிகள் அடித்து 84 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
3-வது ஆட்டத்தில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு 2-வது வெற்றியாகும். முதல் இரு ஆட்டங்களில் வென்றிருந்த இந்தியாவுக்கு இது முதலாவது தோல்வியாகும்.