
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ஸ்மிர்தி மந்தனாவும், பிரதிகா ராவலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்து ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். ஸ்கோர் 48-ஆக உயர்ந்த போது மந்தனா 23 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியே அடுத்து ஹர்லீன் தியோல் வந்தார்.
சுழல், வேகம் என பாகிஸ்தான் பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ரன்வேகம் தளர்ந்ததுடன் பிரதிகா ராவல் 31 ரன்னிலும், அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்னிலும் வெளியேறினர்.
4-வது விக்கெட்டுக்கு தியோலுடன், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்தார். அணியின் ஸ்கோர் 151-ஐ (33.1 ஓவர்) எட்டிய போது ஹர்லீன் தியோல் 46 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்னிலும் சினே ராணா 20 ரன்னிலும், தீப்தி ஷர்மாவும் 25 ரன்னிலும் நடையை கட்ட இந்தியாவின் ரன்ரேட் மேலும் குறைந்தது.
கடைசி கட்டத்தில் விக்கெட்கீப்பர் ரிச்சா கோஷ் அணிக்கு புத்துயிர் ஊட்டி, பவுண்டரி, சிக்சர்கள் விரட்டி அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்டார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் டயானா பெய்க் 4 விக்கெட்டும், சாதியா இக்பால், பாத்திமா சனா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை முனீபா அலியை 2 ரன்னில் வெளியேற அடுத்து வந்த சித்ரா அமின் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.
ரன்தேவையும் அதிகரித்து கொண்டே போக, இந்திய அணியின் தாக்குதலை சமாளித்து போராடிய சித்ரா அமின் 81 ரன்களில் வெளியேற முடிவில் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 159 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இதனால் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் கிரந்தி கவுட், தீப்தி ஷர்மா தலா 3 விக்கெட்டும், சினே ராணா 2 விக்கெட்டும் எடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொண்டது. அவர்களுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியாவின் வெற்றி 12-0 என்ற கணக்கில் நீள்கிறது.
நடப்பு தொடரில் இந்தியாவின் 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இலங்கையை வென்றிருந்தது.
சமீபத்தில் நிறைவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தது சர்ச்சையானது. லீக், சூப்பர்4 மற்றும் இறுதிப்போட்டி என அவர்களுடன் மோதிய 3 ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் கைகுலுக்கும் கலாசாரத்தை அறவே தவிர்த்தனர்.
இந்த நிலையில் பெண்கள் உலகக் கோப்பை போட்டியிலும் அதே நிலைப்பாட்டை இந்தியா தொடருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ போடும் போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கைகுலுக்குவதை தவிர்த்தார். இதை எதிர்பார்த்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவும் அவரை கண்டுகொள்ளவில்லை.