பெண்கள் உலகக் கோப்பை : 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்த ஆஸ்திரேலியா..!!

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்யில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
India Vs Australia
India Vs Australia
Published on

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று (அக்டோபர் 12-ம்தேதி) நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி, இரு ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் வெற்றியையும், தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியையும் தழுவியுள்ளது.

அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எல்லா வகையிலும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சாதிக்க முடியும், இல்லாவிட்டால் திண்டாட்டம் தான் என்ற நிலையில் இந்திய அணி நேற்றைய போட்டியில் களம் இறங்கியது.

இதையும் படியுங்கள்:
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!!
India Vs Australia

இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதிய நிலையில் 48 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், 11 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய போட்டிகான ஆட்டம் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ரவல் களமிறங்கினர்.

இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி 155 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 80 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் (24.3 ஓவர்) திரட்டியது சிறப்பம்சமாகும். பிரதிகா ராவல் தனது பங்குக்கு 75 ரன்களும், அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 38 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 22 ரன்களும் எடுத்து கணிசமான தங்களது பங்களிப்பை அளித்தனர்.

இதன் பின்னர் நுழைந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் பேட்டை நாலாபுறமும் சுழற்ற, அவர் ஆடிய விதத்தை பார்த்த போது இந்தியா 350-ஐ எளிதில் தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் ரிச்சா கோஷ் 32 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அதனை தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னிலும், தீப்தி ஷர்மா 1 ரன்னிலும், அமன்ஜோத் கவுர் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

முடிவில் இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்கள் குவித்து, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது.

ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சுதர்லாண்ட் 9.5 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து 331 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா ஹீலியும், போபி லிட்ச்பீல்டும் முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் (11.2 ஓவர்) எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தனர். லிட்ச்பீல்டு 40 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேற 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய எலிஸ் பெர்ரி 32 ரன்னில் காயத்தால் பாதியில் வெளியேறினார். தொடர்ந்து பெத் மூனி 4 ரன்னிலும், சுதர்லாண்ட் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

இன்னொரு பக்கம் இந்திய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த அலிசா ஹீலி 142 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த தாலியா மெக்ராத் 12 ரன்னிலும், ஆஷ்லி கார்ட்னர் 45 ரன்னிலும், மோலினெக்ஸ் 18 ரன்னிலும் நடையை கட்டினர். இதனால் ஆட்டத்தில் நீயா-நானா? என்ற டென்ஷன் தொற்றியது. அப்போது, காயத்தால் வெளியேறிய எலிஸ் பெர்ரி மீண்டும் களத்தில் இறங்கி 47 ரன்னும், கிம் கார்த்தும் 14 ரன்னும் கூட்டணி போட்டு இந்தியாவின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிக்கனியை பறித்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 302 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!
India Vs Australia

ஆஸ்திரேலியாவுக்கு இது 3-வது வெற்றியாகும். அத்துடன் புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 4-வது லீக்கில் ஆடிய இந்தியாவுக்கு இது 2-வது தோல்வியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com