
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.
இந்த நிலையில் ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதி போட்டி துபாயில் நேற்று அரங்கேறியது. வலிமை வாய்ந்த இரு அணிகள் மோதியதால், இந்த ஆட்டம் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியது.
நியூசிலாந்து ‘டாஸ்’ ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் ரச்சின் ரவீந்திராவும், வில் யங்கும் இன்னிங்சை தொடங்கினர்.
முதல் 5 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்த இவர்கள் அடுத்து வந்த சுழல் பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் வில் யங் 15 ரன்னிலும், ரவீந்திரா 37 ரன்னிலும், அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 11 ரன்னில் அவுட்டாக நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 75 ரன்களுடன் தடுமாறியது.
அடுத்தடுத்து வந்தவர்களும் சொர்ப்ப ரன்களில் அவுட்டாக, அதன் பின் வந்த டேரில் மிட்செலுடன் கைகோர்த்த பிரேஸ்வெல் துரிதமாக ரன் எடுப்பதில் கவனம் செலுத்தியதால் அணியின் ஸ்கோர் 250-ஐ தாண்டியது. 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
252 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் அடியெடுத்து வைத்தனர். முடிந்த வரை வேகமாக ரன் எடுத்து நெருக்கடி இல்லாமல் ஆட வேண்டும் என்ற முனைப்புடன் ஆக்ரோஷமாக விளையாடிய ரோகித் சர்மா 41 பந்துகளில் தனது 58-வது அரைசதத்தை நிறைவு செய்ததுடன், 17 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது. ஸ்கோர் 105-ஐ எட்டிய போது, சுப்மன் கில் 31 ரன்னில் அவுட்டாக, அடுத்து இறங்கிய விராட் கோலி 1 ரன்னிலும், ரோகித் சர்மா 76 ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யரும், அக்ஷர் பட்டேலும் சொர்ப்ப ரன்களில் நடையை கட்ட லோகேஷ் ராகுலும், ஹர்திக் பாண்ட்யாவும் ஜோடி போட்டு சாதுர்யமாக ஆடி பதற்றத்தை தணித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா 18 ரன்னில் ‘ஷாட்பிட்ச்’ பந்தை அடித்து கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த ஜடேஜா பவுண்டரியுடன் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது.
இந்த தொடரில், இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கையில் ஏந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை தட்டித்தூக்குவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002-ல் இலங்கையுடன் ஒரு வெற்றியைப் பகிர்ந்து கொண்டது மற்றும் 2013-ல் 'கேப்டன் கூல்' எம்எஸ் தோனியின் கீழ் இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
சாம்பியன்ஸ் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றிய முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணிக்கு ரூ.19½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.9¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.