

அயர்லாந்து நாட்டில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. தொடரின் இரண்டாம் போட்டியும் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஸ்டார்மாண்ட் மைதானத்தில் நடைபெற்றது. டாசை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சினை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி தங்களது வழக்கமான பாணி ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஹாரி டெக்டர் 47 பந்துகளில் அரைசதம் (53) கடந்தார். அதற்கு அடுத்ததாக பென் காலிட்ஸ் 37 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரும் இந்திய அணியை சமாளிக்கும் அளவுக்கு போதுமான ரன்களை சேர்த்து விட்டனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களை எடுக்க அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்திருந்தது.
154 என்ற எளிய இலக்கினை தொடங்கிய இந்தியா , ஆரம்பத்திலேயே அதன் டாப் ஆர்டரை சரிய விட்டது. விளையாடுவது இந்திய அணியா? அல்லது தெருவோரம் கிரிக்கெட் விளையாடும் ஏதேனும் ஒரு சிறுவர்கள் அணியா? என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்கு அணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தது. முதல் ஓவரிலேயே இந்திய அணி இரண்டு கோல்டன் டக் அவுட்களை சந்தித்தது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் மோசமான முறையில் அவுட்டாகி வெளியேறியதும் இந்திய அணியின் வெற்றியும் வெளியேறியது.
2.4 ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும்(10) பொறுப்பற்ற முறையில் வெளியேற , சாம்பியன் அணி 3 ஓவர் முடிவதற்குள் கடுமையாக தடுமாறியது. திலக் வர்மா மட்டுமே தனது பொறுப்பினை உணர்ந்து 55 ரன்களை எடுத்து, அணி கௌரவமான ஸ்கோரினை பெற உதவினார். ஆயினும் மறுபுறம் அவருக்கு போதுமான ஒத்துழைப்பு இல்லை. சிவம் துபே 20 ரன்களும் , ஹர்ஷ்தீப் ராணா 21 ரன்களை எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி தடுமாறி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியை அயர்லாந்து அணி அவர்களின் முக்கிய வீரர்கள் யாரும் இல்லாமலே சாதித்து விட்டது.இதுவரை இந்திய அணி டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 16 தொடர்களை வென்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை ஒரு சாதாரண அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது, பெரிய வேதனையான விஷயம்.
இந்திய அணியின் வீழ்ச்சிக்கு அயர்லாந்து அணி சார்பாக விளையாடிய ஜெய் முந்திரா முக்கிய காரணமாக இருக்கிறார். முதல் ஓவரிலேயே 2 கோல்டன் டக் விக்கெட்டுகளை எடுத்து , 3 வதாக ஷ்ரேயாசையும் வீழ்த்தி அயர்லாந்தின் வெற்றிக்கு பெரிய ஒத்துழைப்பை கொடுத்துள்ளார். இவர் கல்வி கற்பதற்காக இந்தியாவில் இருந்து அயர்லாந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரசிகர்கள் பலரும் வைபவ் சூர்யவன்ஷி போன்ற அதிரடியான வீரரை, சோதனை செய்து கூட பார்க்காமல் வைத்திருக்கும் அணியின் ஈகோவை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்த தோல்வி இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரை மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாட அங்கீகாரம் பெறாத, ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பகிரங்கமாக கம்பீரை கேலி செய்துள்ளது. "கௌதம் கம்பீரை எங்கள் பயிற்சியாளர் குழுவில் சேர்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கூறுகிறோம். அவருக்குத் திறமை இருப்பதில் சந்தேகமில்லை , இந்திய வீரர்களை வைத்துக் கொண்டு அயர்லாந்தில் அத்தகைய முடிவுகளைப் பெற்றுத் தருவதற்கு உண்மையிலேயே சிறப்பான திறமைகள் தேவை" என்று அந்த பதிவு இருந்தது.