2025 செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல், இந்தியா மற்றும் இலங்கையில் மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட உள்ளது.
இந்தியா நடத்தும் இந்த தொடரில், பாகிஸ்தான் அணி பங்கு பெறும் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள நாடுகள் தங்கள் அணியினரை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
சமீப காலமாக மகளிர் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி, இந்திய அணி மகத்தான வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றி நாடு திரும்பியது.
இது இந்திய மகளிர் அணியின் வலிமையையும் திறமையையும் நிரூபித்துள்ளது. தொடர் வெற்றிகள் மீதான தாக்கம், இந்திய மகளிர் அணியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணியின் செயல்பாடுகளால் மகளிர் கிரிக்கெட்டுக்கு ரசிகர் வட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை (ஆக.19) நேற்று, மும்பையில் நீது டேவிட் தலைமையில் மகளிர் கிரிக்கெட் தேர்வு குழுவினர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரித்கவுரும், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் பங்கேற்றனர்.
ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் முழுக்க கேப்டன் பொறுப்பை ஹர்மன்பிரீத் கவுர் ஏற்கிறார். ஸ்மிருதி மந்தனா துணைக் கேப்டனாக செயல்படுவார். ரிச்சா கோஷ் மற்றும் யஸ்திகா ஆகிய இருவரை விக்கட் கீப்பராக தேர்வு செய்துள்ளனர். ரிச்சா கோஷ் இதில் முதன்மை பெறுகிறார்.
மேலும் பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
உலகக் கோப்பை மகளிர் அணியின் காத்திருப்பு பட்டியலில் தேஜல் ஹசாப்னிஸ், பிரேமா ராவத், பிரியா மிஸ்ரா, உமா செத்ரி, மின்னு மணி மற்றும் சயாலி சத்கரே ஆகியோர் இருந்தனர். உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக செப்டம்பரில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
உலகக் கோப்பை தொடருக்கும் ஆஸ்திரேலியா தொடருக்கும் ஒரே அணியை தான் தேர்வு குழு தேர்ந்தெடுத்து உள்ளது. இதில் ஒரே வித்தியாசம் ஆஸ்திரேலிய தொடரில் அமன்ஜோத் சிங்கிற்கு பதிலாக சாயாலி சத்காரே அணியில் இடம் பிடித்துள்ளார். தற்போது காயம் காரணமாக நீக்கப்பட்டிருந்த ரேணுகா சிங் தாக்கூர் உலகக் கோப்பை போட்டியின் போது அணிக்கு திரும்புவார். அமன்ஜோத் கவுர் இன்னும் காயத்தில் இருந்து மீளாமல் இருப்பதால் வரவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படவில்லை, அதேநேரம் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு தொடர்களையும் வென்று இந்திய அணி வெற்றிக் களிப்பில் உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா தொடரை வென்றால் இந்திய அணி அதிக தன்னம்பிக்கையுடன் உலகக்கோப்பை தொடரை சந்திக்கலாம்.