விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணி வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த அணியில் ப்ரித்வி ஷா இடம்பெறாததால், அவர் இது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
விஜய் ஹசாரே ட்ராபிக்கான ஒருநாள் தொடர் வரும் 21ம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான முதல் மூன்று ஆட்டங்களின் மும்பை அணி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 17 வீரர்கள் கொண்ட இந்த அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், இந்த அணியில் ப்ரித்வி ஷா இடம்பெறாதது அதிர்ச்சியளிக்கும் விதமாக மாறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்டில் ப்ரித்வி ஷா 9 ஆட்டங்களில் விளையாடி வெறும் 193 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இது அவருக்கு மிகவும் எதிராக அமைந்தது. மேலும் அவர் உடற்தகுதி சோதனையிலும் கூட தேர்ச்சி பெறவில்லை. இதனால் வலுவாக மாட்டிக்கொண்டார். இந்த இரு காரணங்களே மிகவும் வலுவாக இருந்ததால் ப்ரித்வி ஷாவை தேர்ந்தெடுக்க முடியாத சூழ்நிலைக்கு தேர்வுக் குழு தள்ளப்பட்டது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் ரஞ்சி தொடரின் போது உடல்தகுதி மற்றும் ஒழுங்கீன செயலால் அவர் அணியில் இருந்து பாதியில் கழற்றிவிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ப்ரித்வி ஷா தற்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார். “சொல்லு கடவுளே....நான் இன்னும் என்ன செய்ய வேண்டும். 65 இன்னிங்சில் 3,399 ரன்கள் (உள்நாட்டு ஒரு நாள் போட்டிகளில்) சராசரி 55.7 மற்றும் ஸ்டிரைக் ரேட் 126 வைத்துள்ளேன். நான் நல்ல ஆட்டக்காரன் இல்லையா? நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மக்கள் இன்னும் என்னை நம்புகிறார்கள். நிச்சயம் நான் திரும்பி வருவேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.
ப்ரித்வி ஷா ஒருகாலத்தில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். ஆனால் இடையில் சில ஒழுகீனச் செயல்களால் ஃபார்ம் அவுட் ஆனார். ஒருமுறை திடீரென்று அவரின் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்களுக்கு அவ்வளவு பெரிய ஷாக். சமூக வலைதளங்கள் எங்கும் அந்த புகைப்படம்தான் வைரலானது. ஏனெனில் முடி அனைத்தும் கொட்டி ஆள் அடையளாம் தெரியாமல் மாறிப்போனார். பின்னர் சின்ன சின்ன தொடர்களில் விளையாட ஆரம்பித்தார். ஆனால், இன்னும் அவர் பழைய ஃபார்முக்கு வராததுதான் வருத்தத்திற்குரியது.