இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் இந்தியா!

Ind vs Eng
4th test
Published on

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளௌயாடி வருகிறது. இந்தத் தொடருக்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் என்று புதிதாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது‌. இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்‌. ஆகையால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி இன்று களம் காண இருக்கிறது.

இந்திய அணியில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் இரு தினங்களுக்கு முன்பே வந்து விட்டது. இந்நிலையில் அன்ஷூல் கம்போஜ் வேகப்பந்து வீச்சாளராக இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில் கடந்த போட்டியில் கை விரலில் காயமடைந்த ரிஷப் பந்த் இப்போட்டியில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், மற்ற இரு போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடியது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால் இந்தியா இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருக்கும். இருப்பினும் இரண்டு போட்டிகளிலும் இந்தியா போராடி தான் தோல்வியைத் தழுவியது. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் பௌலிங் மற்றும் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. இப்போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் வெற்றியைப் பெற்று தொடரை சமன் படுத்த முடியும்.

மான்செஸ்டரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால், இப்போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. முன் வரிசையில் கே.எல்‌.ராகுலும், கீழ் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது‌. ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் வேகத்தில் இங்கிலாந்தை விரைவில் ஆல் அவுட் ஆக்கினால் இந்தியாவிற்கு அது சாதகமாக அமையும்‌.

மான்செஸ்டர் மைதானம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும், பிறகு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். இந்தியா இதுவரை இந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வென்றதில்லை. இந்த வரலாற்றைத் திருத்தி எழுதுமா சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய படை என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்:
மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா நழுவ விட்ட டாப் 5 டெஸ்ட் போட்டிகள்!
Ind vs Eng

கடந்த போட்டியில் பாஸ்பால் கிரிக்கெட்டை ஆடாமல், சாதாரண டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல் இங்கிலாந்து வீரர்கள் மெதுவாக விளையாடினர். இப்போட்டியிலும் இங்கிலாந்தின் பேட்டிங் மெதுவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை பலப்படுத்துகிறார்கள். அதேசமயம் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டராக செயல்பட்டு வெற்றிக்கு முயற்சிக்கிறார்.

தொடரைக் கைப்பற்ற இங்கிலாந்தும், சமன் செய்ய இந்தியாவும் களத்தில் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவின் அசாத்திய சாதனை!
Ind vs Eng

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com