

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இறுதி போட்டி, நேற்று பழமையான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் , இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பானது. போட்டி தொடங்கும் முன்னர் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரின் தேர்வு சரி என்பது போல் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கும் இருந்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் மற்றும் ஜேக்கப் பீத்தல் ஆகியோர் இணைந்து , லார்ட்ஸ் மைதானத்தில் மிகப்பெரிய ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த ஜோடி 30 ஓவர்கள் வரை நிலைத்து நின்று இந்திய அணியின் பவுலர்களுக்கு பெரிய தலைவலியை உண்டாக்கியது. இந்த கூட்டணி 192 ரன்களை சேர்த்து வலுவான அடித்தளத்தை இங்கிலாந்து அணிக்கு உருவாக்கி கொடுத்தது. ஜேக்கப் பீத்தல் 91 ரன்கள் எடுத்த போது ரோஹித் ஷர்மா அவரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.
அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் மிகவும் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை குவிக்க தொடங்கினார். 48 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடித்து 74 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் , மின்னல் வேகத்தில் 13 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார் , இதில் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளும் அடங்கும். இந்த கூட்டணி இங்கிலாந்து அணி 387 என்ற இமாலய ஸ்கோரை எட்ட உதவியது.
இந்த பிரம்மாண்ட ஸ்கோரை விரட்டிய இந்திய அணி விக்கட்டை விடக்கூடாது என்று மிக மிக நிதானமாக விளையாடத் தொடங்கியது. ரோஹித் ஷர்மாவும் சுப்மன் கில்லும் இணைந்து முதல் 10 ஓவர்களில் 49 ரன்களை மட்டுமே சேர்த்தது. 18.3 ஓவரில் இந்த ஜோடி 100 ரன்களை கடந்ததும் தங்களது அதிரடியை தொடங்கியது. இந்த நேரத்தில் அரை சதத்தை கடந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 77 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் விராட் கோலியுடன் இணைந்த ஹிட் மேன் தனது அதிரடியை தொடங்கினார். 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து, 138 ரன்களை குவித்து தன்னை ஓய்வெடுக்க சொன்னவர்களின் வாயை மூடினார். ரோஹித் அவுட் ஆனதும் இந்திய அணி நிலைகுலைந்து போனது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலிக்கு மறுபுறம் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அவர் 74 ரன்கள் எடுத்து வெளியேற தொடர் கை நழுவிப் போனது.
மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற 50 ஓவர்களில் இந்திய அணி 360/7 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 வெற்றிகள் மூலம் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. 3 வது போட்டியின் வெற்றிக்கு காரணமான ஜாக்கோப் பீத்தல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜோ ரூட் தொடர் நாயகன் விருது பெற்றார்.
இந்திய அணியின் செயல்பாடு டி20 தொடர்களுடன் ஒப்பிடுகையில் ஒருநாள் போட்டிகளில் நன்றாக போராடியது கண்கூடானது .ஆனாலும், உறுதியான மிடில் ஆர்டர் இல்லை என்பது தொடர் தோல்விகளுக்கு காரணமாக உள்ளது. அத்துடன் நம்பிக்கை கொடுக்கும் நட்சத்திர பந்துவீச்சாளர் அணியில் இல்லாதது எதிரணிக்கு கொடுக்கும் பெரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
ரோஹித் , சுப்மன் கில் , விராட் போன்ற சீனியர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினாலும் இது போன்ற காரணங்களால் வெற்றி தடைபடுகிறது. இந்த நேரத்தில் இந்திய அணி தேர்வுக் குழு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம் . இல்லாவிடின் அணியின் தொடர் தோல்விகள் தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.