

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை நேரடி ஒரு நாள் தொடரை வென்றதில்லை. அதற்குரிய வாய்ப்பை பெற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்பதால் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடந்தது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற தொடங்கியது.
அதிரடி மன்னன் ரோஹித் சர்மா 38 பந்துகளில் வெறும் 24 ரன்களிலும், விராட் கோலியும் 23 ரன்களிலும் கிறிஸ்டியன் கிளார்க் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேற, அதனை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் 8 ரன்கள் எடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த சுப்மன் கில் ஆறுதல் அளிக்கும் வகையில் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 56 ரன்கள் விளாசிய நிலையில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்த நிலையில் 27 ரன்னில் ஜடேஜா அவுட்டாக, கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டேவன் கான்வே 16 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்து நிலைத்து நின்று விளையாடிய நிலையில் வில் யங் 98 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய கிளென் பிலிப்ஸ் டேரில் மிட்செல் உடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடிய நிலையில் மிட்செல் 96 பந்தில் சதம் விளாசினார்.
இருவரும் ஆட்டமிழக்காமலும், அதிரடியை நிறுத்தாமலும் விளையாடியதால் நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 18-ந்தேதி இந்தூரில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.