

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டியில் 120 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 62 ஆட்டங்களில் இந்தியாவும், 50 ஆட்டங்களில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 7 ஆட்டங்கள் முடிவில்லாமல் போனது.
இப்போட்டியில், நியூசிலாந்து அணியில் தமிழக வீரர் ஆதித்யா அசோக் விளையாடுகிறார். தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பத்தினர் நியூசிலாந்தில் குடிபெயர்ந்துள்ளனர். 2023ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர் தற்போது இந்தியாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டி தரவரிசையில் முறையே முதல் இரு இடங்களில் இருக்கும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வெற்றியுடன் தொடரை தொடங்க கடுமையாக வரிந்து கட்டிக்கொண்டு போட்டி போட்டு விளையாடியதால் இன்றைய ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பட்சமில்லாமல் இருந்தது என்றே சொல்லலாம்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய நிலையில் நிக்கோல்ஸ் 62 ரன்களும், கான்வே 56 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததுடன் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். அதுமட்டுமின்றி இந்த பார்ட்னர்ஷிப் மூலம் கான்வே - நிக்கோல்ஸ் ஜோடி 117 ரன்களை எடுத்து சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
அதனை தொடர்ந்து நிக்கோலஸ் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த வீரர்களில் மிட்செல் 84 ரன்கள் குவிக்க, இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை குவித்தது.
இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பேட்டிங் செய்யத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்லும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா, 2 சிக்ஸர்கள் பறக்க விட்டு 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். கோலி, சும்பன் கில்லுடன் ஜோடி சேர்ந்து அரைசதம் கடந்த நிலையில் கில் 56 ரன்களிலும், கோலி 93 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.
அதனை தொடர்ந்து பொறுமையாக விளையாடி வந்த இந்திய அணி கடைசியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.