
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி வழக்கம் போல் அதிரடியை கையாண்டு ஹர்ஷித் ராணா, முகமது ஷமி ஓவர்களில் பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டனர்.
ஸ்கோர் 81-ஐ எட்டிய போது இந்த கூட்டணியை சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி உடைத்தார். அடுத்து வந்த ஹாரி புரூக்கும், ஜோ ரூட்டும் இணைந்து ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்தனர். அணியின் ஸ்கோர் 168-ஆக அதிகரித்த போது ஹாரி புரூக் 31 ரன்னில், சுப்மன் கில்லிடம் வீழ்ந்த பின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் பின்னர் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்த நிலையில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் நுழைந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய கேப்டன் ஃபார்முக்கு திரும்பியதால், அதன் பிறகு ஆட்டம் பயங்கர ரோஹித் ஷோவாக மாறியது. ரோஹித் சர்மா 90 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 119 ரன்கள் எடுத்தார்.
அவர் தனது 32வது ஒருநாள் சதத்தை அடித்து, சர்வதேச அளவில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட்டை விஞ்சினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் நொறுக்கியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கிறிஸ் கெய்லை (331 சிக்சர்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா அதிக சதம் அடித்த இந்தியர்களின் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார்.
சூப்பரான அடித்தளம் ஏற்படுத்தி தந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் 60 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 5 ரன்னில் அவுட் ஆக, அதன் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்ப அக்ஷர் பட்டேல் நிதானமாக நின்று ஆடி அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார்.
இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி மீண்டும் மகுடம் சூடியது. கடைசி ஒரு நாள் போட்டி ஆமதாபாத்தில் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
முதலாவது டெஸ்டில் தோற்ற இங்கிலாந்து, 2-வது இன்னிங்சில் இந்தியாவுடன் மல்லுகட்டி வெற்றி பெறும் என்ற எதிர்பார்த்த நிலையில் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.