
கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஒருநாள் உலகக்கோப்பை 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதன் முதல் ஆட்டத்தில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது இந்தியா. இந்த ஆட்டத்தில் சுனில் கவாஸ்கரின் ஆட்டம் இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, இந்திய வீரர்களையும் வெறுப்பேற்றும் அளவிற்கு இருந்தது. அப்படி என்ன தான் செய்தார் கவாஸ்கர் என்பதை இந்தப் பதிவில் உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.
முன்பெல்லாம் ஒருநாள் போட்டிகளில் 60 ஓவர்கள் வீசப்படும். ஒரு ஓவருக்கு 5 பந்துகள் வீசப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக இருந்தன. இந்திய வீரர்களில் பலரும் அதிக அனுபவமில்லாமல் இருந்தனர். இருப்பினும் முடிந்த அளவிற்கு போராட வேண்டும் என்ற உணர்வோடு முதல் உலகக்கோப்பையில் காலடி எடுத்து வைத்தது இந்தியா.
1975-ல் ஜூன் 7 ஆம் தேதி நடந்த முதல் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணமே சுனில் கவாஸ்கரின் ஆமை வேக பேட்டிங் தான். ஒருநாள் போட்டியில் அதிக அனுபவமில்லாத கவாஸ்கர், தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வேறு எந்த வீரராக இருந்தாலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தால், நிச்சயமாக சதம் விளாசி இருப்பார்கள். ஆனால், கவாஸ்கர் 174 பந்துகளை சந்தித்து வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்த இன்னிங்ஸில் கவாஸ்கர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.
இந்திய வீரர் ஒருவர் ஒருநாள் போட்டியில், அதிக பந்துகளை சந்தித்து மிகக் குறைந்த ரன்களை எடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார் கவாஸ்கர். முதலில் களமிறங்கி விளையாடிய இங்கிலாந்து 60 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை எடுத்தது. மிகக் கடினமான இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெறும் 132 ரன்களை மட்டுமே எடுத்தது. விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் இந்திய அணி வெற்றிக்காக போராடாமல், டெஸ்ட் கிரிக்கெட்டைப் போன்று விளையாடிய விதம் அனைவரையும் கடுப்பேற்றியது.
ஆட்டத்தை முடித்து கவாஸ்கர் வந்ததும், ஏன் வெற்றிக்காக போராடாமல் தோல்வி அடைந்தீர்கள் என ரசிகர்கள் தகராறு செய்தனர். இருப்பினும் குறைந்த அளவிலான அனுபவமே கவாஸ்கரின் இந்த ஆமை வேக ஆட்டத்திற்கு காரணமாக பார்க்கப்பட்டது. அதன்பிறகு இவர் பல நாடுகளில் விளையாடி, அனுபவம் பெற்று பல்வேறு சாதனைகளையும் புரிந்திருக்கிறார். பல சோதனைகளைக் கடந்து தான் சுனில் கவாஸ்கரும் சாதித்துள்ளார்.
இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் உலகக்கோப்பையில் வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு வெற்றியுடன் வெளியேறியது. அதன் பிறகு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 ஆம் ஆண்டில் மூன்றாவது ஒருநாள் உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.