
இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் SENA நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அவ்வகையில் SENA நாடுகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
ஆசிய வீரர்கள் SENA நாடுகளில் சிறப்பாக செயல்படுவது சற்று கடினம் தான். வெளிநாடுகளில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொள்ளும் வீரரால் மட்டுமே இங்கு நன்றாக விளையாட முடியும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவது என்பது மிகவும் கடினம். ஏனெனில் அதிக ஓவர்களை வீச வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், காயமடையவும் வாய்ப்புள்ளது. இம்மாதிரி சவாலான மைதானங்களில் ஆசிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுட்டுகளை வீழ்த்தினால், அது மிகப்பெரும் சாதனையாகவே பார்க்கப்படும். அப்படியொரு சாதனையைத் தான் நிகழ்த்தியுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா.
நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களுமே தடுமாறினர். இத்தொடரில் 32 விக்கெட்டுகளை வேட்டையாடி, தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் பும்ரா. எப்போதும் தொடரை வென்ற அணியின் வீரருக்கே தொடர் நாயகன் விருது வழங்கப்படும். ஆனால், தொடரை இந்தியா இழந்தாலும், பும்ராவின் சிறப்பான பந்துவீச்சிற்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. SENA நாடுகளில் மட்டும் பும்ரா வெல்லும் மூன்றாவது தொடர் நாயகன் விருது இது. SENA நாடுகளில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நடப்பாண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் என மூன்று முறை பும்ரா தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். மூன்றும் வெவ்வேறு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளரான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டெஸ்டில் பௌலர்கள் தரவரிசையில் 907 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் பும்ரா. இந்திய பௌலர் ஒருவர் பெறும் அதிகபட்ச புள்ளிகள் இதுதான். இதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.
இதற்கு முன்னதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் 1985 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் என இருமுறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் 2007 ஆம் ஆண்டு ஜாகீர் கான் மற்றும் 2014 ஆம் ஆண்டு புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒருமுறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர்.
இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது பும்ராவின் பந்துவீச்சு எந்த அளவிற்கு சிறப்பாக இருந்துள்ளது என்பதை உணர முடிகிறது. இந்தியாவின் ஆல் டைம் பெஸ்ட் பௌலராக பும்ரா வளர்ந்திருப்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்று.