
இந்திய ஆண்கள் கிரிக்கட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தொடர் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளது.
ஜூலை 2ம் தேதி அன்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் எதிலும் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. டாசை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் பேட்டிங்கை இந்திய அணியின் கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் துவக்கி வைத்தனர். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்த ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் ஆரம்பத்திலேயே 2 ரன்களில் வெளியேறி இருந்தார். கேப்டன் சுப்மன் கில் களமிறங்கியதும் ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. கில் முதல் நாளிலேயே சதம் அடித்தார். இந்திய அணி 310/5 ரன்கள் எடுத்த போது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. களத்தில் சுப்மன் கில் (114) மற்றும் ரவீந்திர ஜடேஜா (41) ஆகியோர் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது முதல் சுப்மன் கில் ரன் மழை பொழிந்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் சோர்ந்து விட்டனர். ஜடேஜா 89 ரன்களை எடுத்து வெளியேற அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் (41) சிறிது ஒத்துழைப்பு கொடுத்தார். கில் ஒன் மேன் ஆர்மியாக அணியின் ஸ்கோரை தூக்கி சுமந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 587 ரன்கள் குவித்தது.
சுப்மன் இரட்டை சதமடித்து 269 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த, ஆசிய அணியை சேர்ந்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இதனுடன் கவாஸ்கர் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த 221 ரன்களையும் கடந்து சாதனை செய்தார்.
அடுத்து தங்களது முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறத் தொடங்கியிருந்தது. டக்கட் மற்றும் போப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார்கள். இரண்டாவது நாள் இறுதியில் இங்கிலாந்து அணி 77/3 மட்டுமே எடுத்தது. களத்தில் ஹாரி புரூக் (30) மற்றும் ஜோ ரூட் (18) ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் 3 வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் புரூக் மற்றும் ஸ்மித் ஆகியோரின் பொறுமையான ஆட்டத்தால் அணி மீண்டு வந்தது. புரூக் 158 ரன்களையும் ஸ்மித் 184 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். 2 வது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. மொத்தமாக 6 இங்கிலாந்து அணி வீரர்களை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினர். அதிலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோல்டன் டக் வேறு. இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 407 ரன்கள் மட்டுமே எடுத்து பின்தங்கியது. இந்திய அணியின் சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக 2 வது இன்னிங்சை 180 ரன்கள் முன்னிலையில் இந்தியா துவங்கியது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 64/1 ரன்கள் எடுத்து 244 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ராகுலும் (28) கருண் நாயரும் (7) களத்தில் நின்றனர். ஜெய்ஸ்வால் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
4-வது நாள் ஆட்டம் துவங்கியதும் இந்திய அணி தனது பேட்டிங் வேகத்தை அதிகரித்தது. ராகுல் (55) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் கூட கில்லின் வேகம் குறைய வில்லை . ரிஷப் பண்டுடன் ஜோடி சேர்ந்த அவர் டி20 போட்டியை போல அதிரடி காட்டினார். இம்முறை கில் (161) சதமடித்து அசத்தினார். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து சுப்மன் கில் 369 ரன்கள் குவித்து ஒரே டெஸ்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். 427 ரன்களை குவித்து 607 ரன்கள் முன்னிலைப் பெற்றதும் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
608 ரன்கள் வெற்றிக்கு இலக்கு என்ற மலைப்பில் இங்கிலாந்து அணி தனது 2 வது இன்னிங்சை தொடங்கியது. 4 வது நாள் இறுதியில் இங்கிலாந்து அணி 72/3 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆலி போப்பும் ஹாரி புருக்கும் களத்தில் இருந்தனர்.
5 வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் பலரும் வெளியேற, இங்கிலாந்து அணி இறுதியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஸ்மித் மட்டும் அதிக பட்சமாக 88 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் பர்மிங்காம் மைதானத்தின் 58 கால வரலாற்றையும் முடித்து, வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியானது இந்தியா.